Published : 25 Sep 2016 09:28 AM
Last Updated : 25 Sep 2016 09:28 AM
வேடந்தாங்கலில் பறவைகள் வரத் தொடங்கி சீசன் ஆரம்பித்துள்ளதால் அடுத்த மாதம் சரணாலயம் திறக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந்தாங்க லில் பறவைகள் சரணாலயம் அமைந்துள் ளது. இங்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் சீசன் தொடங்குவது வழக்கம். நைஜீரியா, ஆஸ்திரேலியா, நமீபியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இனப் பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன.
ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டையிட்டு, குஞ்சுகள் பொரித்து பின்னர் அவற்றை அழைத்துக்கொண்டு பறவைகள் தாயகம் திரும்புவது வழக்கம். சரணாலயத்துக்கு வரும் பறவைகளை, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சரணாலயம் திறக்கப்படும்.
கடந்த ஆண்டு நவம்பரில் சரணாலயம் திறக்கப்பட்டது. அப்போது, பருவமழை கொட்டித் தீர்த்ததால் உத்திரமேரூர், வெள்ளப்புத்தூர் போன்ற ஏரிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வேடந் தாங்கல் ஏரி நிரம்பியது. வேடந்தாங்கல், கரிக்கிலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை காணப்பட்டதால், கடந்த சீசனில் ஆயிரக்கணக்கான வெளி நாட்டு பறவைகள் சரணாலயத்தில் குவிந்தன.
இதுகுறித்து, சரணாலய வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு சீசனில் சாம்பல் நாரை, நத்தை கொத்தி நாரை, பாம்புதாரா, நீர்க்காகம், வெள்ளை அரிவாள் மூக்கன், வக்கா, சிறிய வெள்ளை கொக்கு, வெளிர் உடல் அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை என பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் என மொத்தம் 33,896 பறவைகள் சரணாலயத்துக்கு வந்தன.
இவை மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து 82,642 பறவைகளாக சரணாலயத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளன. பறவைகளை காண்பதற்காக பெரியவர்கள் 1,14,623 மற்றும் சிறியவர்கள் 43,746 பேர் சரணாலயத்துக்கு வந்தனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சரணாலயம் மூடப்பட்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளை வனத்துறை மேற்கொண்டது. ஏரியின் கரைப் பகுதிகளில் ஆங்காங்கே மரக் கன்றுகள் நடப்பட்டன.
ஏற்ற சீதோஷ்ண நிலை
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேடந்தாங்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்தில் தங்கியுள்ளன. மேலும், பறவைகள் வரக்கூடும் என்பதால் அடுத்த மாதம் சரணாலயம் திறக்கப்படும் என்று வனச் சரகர் தெரிவித்தார்.
இதுகுறித்து, சரணாலய வனச் சரகர் சுப்பையா கூறியதாவது: பருவமழை தொடங்கியுள்ளதாலும், பறவைகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை காணப்படுவதாலும் தற்போது சீசன் ஆரம்பித்துள்ளது. பறவைகளும் வரத் தொடங்கியுள்ளன. சரணாலய ஏரியில் பகல் நேரங்களில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட பறவைகளையும், இரவு நேரங்களில் 1,500-க்கும் மேற்பட்ட பறவைகளை காண முடிகிறது.
இனி வரும் நாட்களில் பறவைகளின் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் பறவைகளை கண்டு ரசிப்பதற்காக அடுத்த மாதம் சரணாலயம் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT