Published : 20 Feb 2014 12:00 AM
Last Updated : 20 Feb 2014 12:00 AM
தமிழக காவல் துறைக்கு புதிதாகவாங்கப்பட்டுள்ள 403 புதிய ரோந்துமோட்டார் சைக்கிள் சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர காவல் துறையின் புதிய ரோந்து முறை மற்றும் புதுப்பிக்கப்பட்ட 403 ரோந்து வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவுவதை உறுதி செய்வதில் காவல்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே காவல் துறையின் பணிகள் மேலும் சிறக்கும் வகையில் புதிய காவல் நிலையங்களைத் தோற்றுவித்தல், காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டுதல், காவல் கண்காணிப்புக்காக புதிய ரோந்து வாகனங்களை வாங்குதல் போன்ற முனைப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை பெருநகர காவல் துறையில் 135 காவல் நிலையங்கள் உள்ளன. சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் 3 முதல் 4 பிரிவுகளாக அமைத்து, புதிய ரோந்து முறை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் இரு சக்கர வாகனங்களுடனான காவலர்கள் ரோந்து செல்வார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணிக்கு சென்று, நுண்ணறிவு பற்றிய தகவல்களை சேகரிப்பதுடன், பொது மக்களுடன் உள்ள உறவை மேம்படுத்தவும், சட்டம்–ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எழும்போது, கூடுதல் பாதுகாப்புக்கு காவலர்கள் வரும்முன் அங்கு விரைந்து சென்று பணியாற்றவும் பயன்படுத்தப்படுவார்கள்.
இந்தப் புதிய ரோந்து முறை செயல்பாட்டிற்காக, சென்னை முழுவதும் 403 ரோந்து பிரிவுகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் சுழற்சி முறையில் 3 காவலர்கள் 24 மணி நேரமும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இந்த புதிய ரோந்து முறை, எதிர்காலத்தில் சென்னை காவல் பணியில் நிரந்தரமான ஒன்றாக இருக்கும்.
சென்னை பெருநகர காவல்துறையின் புதிய ரோந்து முறை மற்றும் ரோந்து காவலர்களுக்கு தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மேல் சட்டை, தலைக்கவசம், ஒலி எழுப்பான்கள், எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் புதுப்பிக்கப்பட்ட 403 ரோந்து வாகனங்களை முதல்வர் தலைமைச் செயலகத் தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த புதிய முறை ரோந்து பணிக்கென ‘ரோந்து அதிகாரிகள்’ என்று தனிப்பட்ட முறையில் காவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் கே.ராமானுஜம், சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT