Published : 05 Oct 2014 11:15 AM
Last Updated : 05 Oct 2014 11:15 AM
முக்கிய தொழிலதிபர் வரிசையில் முன்னனியில் இருந்தவர் என்.எம். எனப்படும் என்.மகாலிங்கம். அவரது மறைவு கொங்கு மண்டலத்தில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழிற்சாலைகள், கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் என அவரது தொழில் சாம்ராஜ்யத்தில் 50 ஆயிரம் குடும்பங்கள் பங்களிக்கின்றன.
91-வது வயதிலும், எளிமை அடையாளத்தையும் காந்திய சிந்தனையும் கொண்ட நா.மகாலிங்கத்தின் உயிர், காந்தி ஜெயந்தி அன்று நடந்த வள்ளலார் விழாவில் பங்கேற்றிருந்தபோது பிரிந்துள்ளது. மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, ‘எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.
நான் எப்போதும் கலந்து கொள்ளும் காந்தி ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வேன்’ என்று பிடிவாதமாகத்தான் சென்னை கிளம்பியுள்ளார். இவர் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்படியான, பரம்பிக்குளம் ஆழியாறு அணை மற்றும் பாசனத் திட்டத்தை முடித்து வைத்தார். அதன் திறப்பு விழாவுக்கு பொள்ளாச்சி அருகில் உள்ள மலைப் பகுதியான பரம்பிக்குளம் அணைக்கு அன்றைய பிரதமர் நேருவை அழைத்து வந்திருக்கிறார்.
நடுக்காட்டில் உள்ள அந்த அணையைக் கட்டும்போதும் அதற்கான திட்டங்களுக்காகவும், மதிப்பீட்டுக்காகவும் யானை மீது அமர்ந்துதான் அந்தப் பயங்கரக் காடுகளில் பயணம் செய்வாராம் என்.எம். அந்த அளவுக்கு மன தைரியம் உள்ளவர் என்கிறார்கள்.
இறுதி மரியாதை செலுத்துவார்
எந்த இடமாக இருந்தாலும், காரில் பயணம் செய்யும்போது கூட, இறந்த மனிதர்களின் உடலை எடுத்து வருவதைப் பார்த்தாலே, உடனே காரை நிறுத்தச் சொல்லி செருப்பையும் கழட்டிவிட்டு வணங்கி மரியாதை செலுத்துவாராம். கடைசிவரை அவ்வாறு இறுதி மரியாதை செலுத்துவதை கடைப்பிடித்துள்ளார் என்.எம். தனது நண்பர்கள், உறவினர்கள் யாராவது இறந்துவிட்டால்கூட அதன் பிறகு அந்த குடும்பத்தை யார் வழி நடத்துவார்களோ அவர்களை அழைத்து தேவையான உதவிகளைக் கேட்டுச் செய்வார்.
அதேபோல் தன் கம்பெனிகளில் வேலைசெய்யும் சாதாரண வேலையாட்கள் முதல் பெரிய அதிகாரிகளின் குடும்ப விழா வரை பாரபட்சமின்றி கலந்து கொள்வார். அப்படிக் கலந்து கொள்ள முடியாதபோது, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ அல்லது தனது நிர்வாக அதிகாரிகளையாவது கலந்து கொள்ளச் சொல்வார். எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டில் உள்ள நண்பர்களின் வீட்டுக்குத் தவறாமல் செல்வதோடு சாதாரணமானவர்களின் வீடுகளில் கூட தங்குவாராம்.
அவர் ஆரம்பித்து நடத்தி வரும் அத்தனை தொழில்களும் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழிலாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விவசாயத்தின் மீது பற்றுக் கொண்டவர். சர்க்கரை ஆலைகளில் மதுபானங்கள் தயாரிக்க அனுமதி கிடைத்தபோதும், மதுபான தொழிற்சாலைத் தொடங்க மறுத்தவர் என்.எம். ‘காந்திய கொள்கை கொண்ட நான் இதில் எவ்வளவு லாபம் வந்தாலும் மதுபானத் தொழிற்சாலை ஆரம்பிக்க மாட்டேன்’ என்று மறுத்துவிட்டாராம்.
காந்தியடிகள் ஒரு புத்தகத்தில், ‘சோயா’ தானியத்தில் அதிகமான புரதம் இருக்கிறது. இது மாமிசத்துக்கு மாற்று உணவு என்று எழுதி இருந்ததைப் படித்ததும், உடனே சைவ உணவு சாப்பிடும் மக்கள் நலம் பெற வேண்டும் என்பதற்காகவே ‘சக்தி சோயாஸ்’ என்ற தொழிற்சாலையை ஆரம்பித்தார். அதில் நஷ்டம் வந்தபோது கூட ‘சைவம் சாப்பிடும் மக்களுக்காகத் தொடர்ந்து நடத்துவேன்’ என்றாராம்.
எத்தனையோ அதரவற்றோர் ஆசிரமங்கள், முதியோர் காப்பகங்கள், மடாலயங்கள், கோயில் கள் என்று நன்கொடையை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருந்தவர் என்.எம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT