Published : 08 Feb 2017 10:01 AM
Last Updated : 08 Feb 2017 10:01 AM
‘மாடு இல்லா வீடு பாழ்’ என்பது பழமொழி. ஏறு பூட்டி உழவு செய்வதில் தொடங்கி, மாடு கட்டிப் போரடித்து, தட்டு வண்டியில் பாரம் ஏற்றி மக்கள் பஞ்சம் போக்கியது வரை பண்டைய தமிழகத்தில் மாடுகளோடுதான் தமிழர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. அதனால், மாடுகளுக்காகவே விழா எடுக்கப்பட்டு, அந்த விழாக் காலங்களில் பொழுதுபோக்கவும், வீரத்தை நிரூபிக்கவும் மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, மாடு ஓட்டம், மாடு மறித்தல், பட்டிப் பொங்கல், கன்று காணிக்கை, தம்பிரன் மாடு, சலங்கை எருது ஆட்டம், மாட்டு வண்டிப் பந்தயம், மாட்டு வாகடம் போன்ற வீர விளையாட்டுகள், பாரம்பரியமாக நடைபெற்று வந்தன.
தொழுவத்தில் முதல்முறை யாக, பொங்கலன்று ஈனப்படும் கன்றுகளைக் கோயில்களுக்குக் காணிக்கையாக விடுவதும் காளை களைக் கொண்டாடி மகிழ்வதும் இந்த மரபின் நீட்சியே. காலப் போக்கில் நகர விரிவாக்கம், மழை யின்மை, நாகரிக வளர்ச்சியால் வேளாண்மை ஆர்வம் மக்களி டையே குறையத் தொடங்கியது. அதுபோல், மாடுகளை மையமாகக் கொண்டு நடக்கும் விளையாட்டு களுக்கும் ஏற்பட்ட சட்டச் சிக்கல், நெருக்கடியால் மாடு வளர்ப்பும், அதன் விளையாட்டுகளும் குறைந்தன.
படம்: எல்.பாலச்சந்தர்
தற்போது காலம் கடந்து தமிழகத்தில் இயற்கை விவசாயம், மாடு வளர்ப்பு மீது மக்களிடையே ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், பண்டைய கலாச்சாரம், பண்பாடு சார்ந்த விளையாட்டுகள், இயற்கை சார்ந்த விவசாயத்தை மீட்டெடுக் கும் எண்ணம், இன்றைய இளம் தலைமுறையினரிடையே ஏற்படத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது மாண வர்கள் போராட்டத்தால் நிரந்தர தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
வாழ்விடமாக மாறிய பட்டி
இதுகுறித்து பண்டைய வீர விளையாட்டுகளை பற்றி பல்வேறு கள ஆய்வு மேற்கொண்டுள்ள காந்திகிராமம் கிராமிய பல்கலைக் கழக பேராசிரியர் ஓ.முத்தையா கூறியதாவது:
உழவு மாடு, ஏர் மாடு, வண்டி மாடு, பொத மாடு, இறவை மாடு, கறவை மாடு, பட்டி மாடு, கிடை மாடு, மலை மாடு, ஜல்லி மாடு, பிடி மாடு, சண்டி மாடு, பூம்பூம் மாடு, கோயில் மாடு, தம்பிரான் மாடு என தமிழர்கள் வளர்க்கும் மாடுகளின் பட்டியல் மிக நீளமானவை.
பண்டைய காலத்தில் மாடு களுக்கான தொழுவத்தை அதா வது பட்டியை முதலில் போட்டு விட்டு, தமிழர்கள் தாங்கள் தங்கு வதற்கான குடியிருப்புகளை அமைத்து, அதனைச் சுற்றியே ஒரு ஊரை உருவாக்குவது முன் னோர்களின் வழக்கம். ஆடுகள் அடைக்கப்படும் இடம் பட்டி, மாடுகள் அடைக்கப்படும் இடம் தொட்டி. இந்த பட்டி, தொட்டியைத் தான் பின்னாளில் நமக்கான வாழ்விடமாக ஆக்கிக்கொண் டோம். பட்டி மனிதர்கள் தங்குவ தற்காக உருவாக்கப்பட்டது அல்ல. மாடுகளுக்கானது. ‘பட்டி பெருகிப் பால்பானை பொங்கவே’ மாடு களுக்கு விழா எடுக்கப்பட்டது. இந்த பட்டி என்பதே பின்னாளில் ஊரானது. மாட்டுச் செல்வத்தைத் துரத்திவிட்டு பட்டியைப் புரமாக்கி னோம், நகரமாக்கினோம். இதனால் நரகமாகிப் போனது நமது வாழ்க்கை.
சங்க இலக்கியமான முல்லைக் கலியில் ஆயர் இன மக்கள் தங்கள் வீட்டில் பெண் குழந்தை பிறந்த அன்று அதேநாளில் தொழுவத்தில் பிறந்த ஒரு கன்றையும் தனியே பிரித்து வளர்ப்பார்கள். குழந்தை குமரியாக வளர, கன்றும் காளை யாகக் கூரான கொம்புகளுடன் முறுக்கேறி நிற்கும். மாட்டை அடக்கித் தழுவிய காளையன் மங்கையை மணம் முடிப்பான். இதையே “கொல்லேற்றுக் கோடஞ் சுவானை மறுமையிலும் புல்லாலே ஆய மகள்” என்கிறது முல்லைக்கலிப் பாட்டு.
மண் மலடானது
காளையிடம் தோற்கும் வீரமில் லாத கோழையனை மறுபிறவி யிலும் பெண் ஏறெடுத்துப் பார்க்க மாட்டாள் என்பதே இதன்பொருள். இப்பொழுது வீரம் தேவை யில்லை, பொருளாதார அடிப்படை யிலேயே பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக் காக மாடு வளர்ப்பு என்றில்லாமல் மாடு நமது பண்பாடு என்பதை உணர்ந்து, இதை மண் மணத்தோடு கொண்டாடி மகிழ வேண்டும்.
அன்று மாட்டுத் தொழுவத்தால் வேளாண்மை நிலம் செழித்தது. உரக்குழிகள் இயற்கை விளைச்சலைப் பெருக்கின. இன்று மாடு போனது. மண் மலடானது. மருத்துவம் பெருகிவிட்டது. மண் வளம், இயற்கை வேளாண்மை, சுத்தமான சத்தான பால், மருந் தில்லா உணவு, மாட்டு வண்டிப் பயணம், கூட்டு வண்டிப் பயணம், உழைப்பு சார்ந்த வாழ்க்கை, கட்டிளங்காளையரின் வீரம் அனைத்தையும் இழந்து விட்டோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT