Published : 07 Jan 2014 02:32 PM
Last Updated : 07 Jan 2014 02:32 PM

கோ-ஆப் டெக்ஸில் விவசாயிகளின் பேஷன் ஷோ

தமிழர்களின் அடையாளச் சின்னமான வேட்டி அணியும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் வேட்டி தினம் கடைபிடிக்கப்படும் என்றும், வேட்டியின் பெருமையை எடுத்துக்கூறும் வகையில், வேட்டி அணிந்த இளைஞர்கள், பருத்தி விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் பங்கேற்கும் வேட்டி அணிவகுப்பு நடத்தப்படும் என்று, கோ ஆப்-டெக்ஸ் மேலாண் இயக்குநர் உ.சகாயம் அறிவித்துள்ளார்.

சென்னை கோ ஆப்-டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை சகாயம் அளித்த பேட்டி வருமாறு:

கோ ஆப்-டெக்ஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த நிதியாண்டில், 245 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளோம். கடந்த 2012 தீபாவளிக்கு 101.28 கோடி ரூபாய் அளவிலும், 2013 தீபாவளியில் 121.29 கோடி ரூபாய் அளவுக்கும் விற்பனை செய்துள்ளோம்.

கோ ஆப்-டெக்ஸ் துணிகளை பிரபலப்படுத்தும் வகையில், கனவு - நனவுத் திட்டம், தங்கமழைத் திட்டம், மாப்பிள்ளை செட்டு, சரித்திரா சேலைகள், 25 வகைகளில் படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவை பல்வேறு இலக்கியக் காட்சிகள், ஐவகை நிலங்கள் மற்றும் விஞ்ஞானிகளும் அவர்களின் கண்டுபிடிப்புகளும் கொண்ட டிசைன்களில் துணிகள் தயாரித்துள்ளோம்.

அடையாளச் சின்னம்

தமிழர்களின் அடையாளச் சின்னமான வேட்டி அணிவது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், வேட்டி தினம் கொண்டாட முடிவெடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் வேட்டி தினம் கொண்டாட மாவட்ட ஆட்சியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு கடிதம் எழுதியுள்ளோம். திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. வேட்டி தினம் கொண்டாடும் இடங்களில், அரசு ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வருவர்.

வேட்டி தினம்

கோ ஆப்-டெக்ஸ் நிறுவனத்தின் சென்னை விற்பனை வளாகங்களில், செவ்வாய்க்கிழமை வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ் மற்றும் அரசு செயலாளர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியைத் துவக்கி வைக்கின்றனர். வேட்டி தினத்தன்று, கோ ஆப்-டெக்ஸில் வந்து வேட்டி வாங்குவோருக்கு, ஏற்கெனவே இருக்கும் 30 சதவீத தள்ளுபடியுடன் கூடுதல் சலுகை அளிக்கப்படும். கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்தால், கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

மேலும் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் பங்கேற்கும் பேஷன் ஷோ அணிவகுப்பு நடைபெறும். இதில் பங்கேற்போர் பலவிதமான மாடல்களில் வேட்டி அணிந்து வருவர். எங்களிடம் ஜமீன் வேட்டி, அமைச்சர் வேட்டி, இளவட்ட வேட்டி என 1,000 விதங்களில் வேட்டிகள் உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x