Published : 19 Feb 2014 03:40 PM
Last Updated : 19 Feb 2014 03:40 PM
பேரறிவாளன் உள்ளிட்டோரை வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்திருப்பது மெச்சத்தகுந்த, மனிதாபிமான நடவடிக்கை என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"1998 ஆம் ஆண்டு ஜனவரி 28-ல், பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில், குற்றம் அற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன் பேரறிவாளர் ஆகிய ஆகிய மூவர் உட்பட 26 பேர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தால் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்; மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது; நால்வருக்குத் தூக்கு உறுதி செய்யப்பட்டது. பின்னர் நளினியின் கருணை மனு மீது, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடைசியாக, மேற்கண்ட மூவருக்கும் தூக்கு உறுதி செய்யப்பட்டது.
98 ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்குப் பின்னர், இவர்கள் மூவரும் கடந்த 16 ஆண்டுகளாகச் சிறையில் தனிக்கொட்டடியில் அடைக்கப்பட்டு இருந்தனர். செய்யாத குற்றத்திற்காக ஒட்டுமொத்தமாக 23 ஆண்டுகள் இவர்கள் சிறையில் வாடி இருக்கின்றனர், சித்திரவதையான மன வேதனைகளை அனுபவித்து இருக்கின்றார்கள். தங்கள் இளமை வாழ்வையெல்லாம் இழந்து விட்டார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இவர்கள் விடுத்த கருணை மனுக்கள் மீது, 11 ஆண்டுகள் 4 மாதங்கள் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 2014 ஜனவரி 21 ஆம் தேதி, 15 பேர்களது மரண தண்டனையை ரத்துச் செய்த அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், இன்றைக்கு இந்த மூவருடைய தூக்குத் தண்டனையையும் உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்து இருக்கின்றது. இவ்வளவு நீண்ட காலதாமதத்துக்கு அரசுத் தரப்பால் எந்தக் காரணத்தையும் கொடுக்க முடியவில்லை.
சிறையில் அவர்கள் எவ்வித மனக்கஷ்டங்களும் இன்றி நிம்மதியாக இருந்தார்கள் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் சொன்னதை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம், நீதியரசர் ரஞ்சன் கோகோய், நீதியரசர் சிவகீர்த்திசிங் ஆகியோர் முற்றிலுமாக மறுத்து, அவர்கள் மரணத்தை எதிர்நோக்கி எத்தகைய மனவேதனையை அனுபவித்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.
இன்றைக்கு மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டு விட்டது. ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டாலும், அதை வாழ்நாள் முழுக்கத் தண்டனை என்று எடுத்துக் கொள்ளாமல், இந்தியக் குற்ற இயல் நடைமுறைச் சட்டம் 432, 433 ஏ ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்தி, ஒரு மாநில அரசு அவர்களைச் சிறையில் இருந்து விடுவிப்பதற்கான சாத்தியங்களை உள்ளடக்கியதாக இந்தத் தீர்ப்பினை வழங்கி இருக்கின்றார்கள். இதுதான் இந்தத் தீர்ப்பின் சிறப்பு.
உலகத்தில் 137 நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. அதுபோல, இந்தியாவிலும் மரண தண்டனை முற்றாக நீக்கப்படுவதற்கு வழி அமைக்கின்ற விதத்தில், இந்திய நீதித்துறையின் வரலாற்றில், இது ஒரு மகத்தான தீர்ப்பாக அமைந்து இருக்கின்றது.
இந்த மூவரும் குற்றம் அற்றவர்கள். திருபெரும்புதூர் சம்பவத்துக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது என்னுடைய கருத்து.
2012 ஆகஸ்ட் மாதம் இவர்களது கருணை மனுக்களை மத்திய அரசு ரத்துச் செய்தபோது, செப்டெம்பர் 9 ஆம் நாள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 28 ஆம் தேதி செங்கொடி, காஞ்சியில் தீக்குளித்து மடிந்தாள். இந்த மூன்று உயிர்களைக் காப்பாற்றத் தன் உயிரைத் தந்தாள். 30 ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் நாகப்பன், நீதியரசர் சத்தியநாராயணா அமர்வில், இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்வதற்காக, உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வந்து, அற்புதமான வாதங்களை முன்னெடுத்து வைத்தார். நீதிபதிகள் இருவரும் தூக்குத் தண்டனைக்குத் தடை விதித்தார்கள். சிறைக்கு உள்ளே அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று நான் முறையிட்டேன்.
அதன்பின்னர், இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது; நியாயமான விசாரணை நடக்காது; எனவே, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியைத் தன் கட்டுக்குள் வைத்து இருக்கின்ற ஆதிக்கத் தலைமை திரைமறைவில் செய்து கொடுத்த உத்தரவின் பேரில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதன்பேரில் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அங்கே நடைபெற்ற 24 நாள்கள் அமர்வுகளிலும், ராம் ஜெத்மலானி வந்து பங்கு ஏற்றார்கள். சில நாள்களில், மணிக்கணக்காக நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தார். இந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் நாள், வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் உள்ளிட்ட 15 பேர் தூக்குத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள் அல்லவா, அந்த வழக்கிலும் அந்த நான்கு பேர்களுக்காக ஆஜராகும்படி நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஜெத்மலானி ஆஜராகி முன்வைத்த வாதங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு அமைந்தது. அதே அடிப்படையில்தான் இந்தத் தீர்ப்பும் வெளிவந்து இருக்கின்றது.
மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று, பல்வேறு அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருமே போராடினார்கள். குறிப்பாக, 2011 இல், இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்தபோது, ஒட்டுமொத்தத் தமிழகமும் கொந்தளித்து எழுந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள். தமிழகத்திலும், தரணியெங்கும் வாழுகின்ற கோடிக்கணக்கான தமிழர்கள் மிகுந்த கவலையோடு, தங்களால் இயன்ற வழிகளில் எல்லாம் போராடினார்கள்.
அதன் விளைவாக, 30 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதே நாளில், தமிழகச் சட்டமன்றமும், மரண தண்டனையைக் குறைக்கக் கோரி, இந்தியக் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
இப்பொழுது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம் சுட்டிக் காட்டி இருப்பதைப் போல, இந்தியக் குற்ற இயல் சட்டத்தின் 432, 433 ஏ பிரிவுகளின்படி, இவர்கள் மூவரையும் வேலூர்ச் சிறையில் இருந்து உடனே விடுதலை செய்ய வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு இருந்து, தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று காலையில் கூடுவதாக எனக்குத் தகவல் கிடைத்து இருக்கின்றது. அதில் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன். இவர்கள் மூவரையும் தவிர, ஏற்கனவே சிறையில் வாடிக்கொண்டு இருக்கின்ற நளினியையும் சேர்த்து விடுதலை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு முடிவு செய்யும்; அது மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்படுகின்ற, மரண தண்டனைக்கு எதிரான ஒரு சரியான முடிவாக அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
தமிழகத்தின் அனைத்துச் செய்தி ஊடகங்களும், இந்தப் பிரச்சினையில் மரண தண்டனைக்கு எதிரான அணுகுமுறையோடு செய்திகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தன. அதற்காக அனைத்து ஏடுகளின் செய்தியாளர்கள், ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, இம்மூவரையும் வேலூர்ச் சிறையில் இருந்து விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு எடுத்து இருக்கின்றது. இது மெச்சத்தகுந்த, மனிதாபிமான நடவடிக்கை ஆகும். தமிழக முதல்வரின் கருணையும், மனிதாபிமானமும் மிக்க இந்த நடவடிக்கைக்கு, கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று வைகோ கூறினார். இவ்வாறு அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT