Published : 30 Dec 2013 11:00 AM
Last Updated : 30 Dec 2013 11:00 AM
அறிவாலய இடத்தைப் போன்று காங்கிரஸுக்கு சொந்தமான காமராஜர் அரங்கம் முன்பும், திறந்த வெளி நிலம் பராமரிப்பில் விதிவிலக்கு வழங்கப்பட்டது. அதைப்பற்றி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பேசவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:
அறிவாலய ஓ.எஸ்.ஆர். (திறந்தவெளி நிலம்) நிலம், இதுவரை தானப் பத்திரம் மூலம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட வில்லை. ‘சூடு, சொரணை இருக்குமானால், நிலத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உங்கள் மேலிடத்தில் சொல்லுங்கள்’ என்று, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சாடியிருப்பதாக செய்தி வந்துள்ளது.
கடந்த 1988-ல் திமுக அறக்கட்டளை சார்பாக கட்டப்பட்ட அண்ணா அறிவாலயத்தின் கட்டிட வரைபட அனுமதியின்போது, சுமார் 10 சதவீத திறந்த வெளி ஒதுக்கீடு நிலத்தை திமுக அறக்கட்டளையே பராமரித்துக்கொள்ள மனு செய்யப்பட்டது. அம்மனு தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்த திறந்தவெளி ஒதுக்கீட்டு இடத்தை, அண்ணா பூங்காவாக பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு வரைபட அனுமதி அளிக்கப்பட்டு, அது தொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
திமுக அறக்கட்டளைக்கு விதிவிலக்கு அளித்தது போலவே, 1988ல் காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந் தமான காமராஜர் அரங்கம் முன்புள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு இடத்தை, அந்த அறக்கட்டளையே பராமரித்துக்கொள்ள அனுமதி அளித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இப்போது கூறியுள்ள குற்றச்சாட்டில், காங்கிரஸ் அறக்கட்டளையைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ஆட்சியில் 5.8.1988 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில்தான், இந்த இடத்திற்கான விதி விலக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு கெஜட்டிலும் அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
கடந்த 2004 அதிமுக ஆட்சியில், அறக்கட்டளைக்கு அரசு அனுப்பிய கடிதத்தில், திறந்தவெளி இடம் முறை யாகப் பராமரிக்கப்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தி ருப்பதாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கோரியிருந்தது. இதற்கு அறக்கட்டளை சார்பில் அரசுக்கு விளக்கமாகப் பதில் எழுதப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையிலும், எம்.எம்.டி.ஏ.வின் தலைமை திட்ட அலுவலரும், சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளரும் 2007ம் ஆண்டு, திறந்தவெளிப் பூங்காவை நேரில் பார்வையிட்டு, அந்த இடம் முறைப்படி பராமரிக்கப்படுவதாகவும், விதிமீறல்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதன்படி, அரசு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை முடித்துக் கொள்வதாகவும், மேல் நடவடிக்கையை விட்டுவிடுவதாகவும், 2007ல் தெளிவாகக் கடிதம் எழுதியுள்ளது.
இவை அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டு, ஆவணங்கள், அரசாணைகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு மாநகராட்சி மேயராக இருப்பவர் இவ்வாறெல்லாம் பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT