Published : 06 Jan 2017 07:47 PM
Last Updated : 06 Jan 2017 07:47 PM
கோவை மாவட்ட வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் தொட்டிகளை தேடி அலையும் வனவிலங்குளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அதற்கேற்ப வன எல்லைகளில் தண்ணீர் தொட்டிகளை ஏற்படுத்தவும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் ஒரு முறைக்கு இருமுறை நீர் நிரப்பவும் வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் .
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. ஆறு, குளம், குட்டைகள் பெரும்பாலும் வறண்டு காணப்படுகிறது. நகர்ப்புறத்து சாக்கடைகள் நிரம்பும் குளங்களில் மட்டும் தண்ணீர் உள்ளதை தற்போது பார்க்க முடிகிறது. மக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகளின் நிலையே இப்படியென்றால் அடர்ந்து வனங்களுக்குள் நிலைமை ரொம்பவம் மோசம்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை வனக்கோட்டத்தில் யானை, புலி, சிறுத்தை. கரடி, கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை வன உயிரினங்கள் வாழ்கின்றன. சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனக்கோட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, மதுக்கரை உள்பட ஏழு வனச்சரகங்கள் உள்ளன. சமீப காலமாக மாறி வரும் தட்பவெப்ப நிலை, பருவமழை குறைவு போன்ற காரணங்களினால் காட்டினுள் வாழும் வன உயிரினங்களுக்கான இயற்கையான நீர் ஆதாரங்கள் அனைத்தும் வற்றியுள்ளன. வனங்கள் வரலாறு காணாத கடும் வறட்சியை சந்தித்து வருகிறது.
இதனால் போதிய உணவும், தண்ணீரும் இல்லாமல் காட்டில் வாழும் உயிரினங்கள் தவித்து வருவதாக வனத்துறையினரே தெரிவிக்கின்றனர். இதனால் பலவீனமடைந்து காணப்படும் விலங்குகள் பல எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தும் வருகின்றன. குறிப்பாக காட்டுயானைகள் இவ்வறட்சியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 2016ல் மட்டும் கோவை வனக்கோட்டத்தில் நோய் தாக்குதல் உள்ளிட்ட வறட்சியை மையமாகக் கொண்டு 23 யானைகள் உயிரிழந்துள்ளன. மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதியில் மட்டும் 12 யானைகள் பலியாகியுள்ளன. கடந்த ஒரே மாதத்தில் ஒன்பது யானைகள் இறந்துள்ளன. தற்போதும் நான்கு யானைகள் நோய் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இவற்றின் தண்ணீர் தேவையை ஓரளவுக்கு சரிகட்ட வன எல்லைகளில் செயற்கையான தண்ணீர் தொட்டிகளை கட்டி இதில் நீர் நிரப்பும் பணியினை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
குறிப்பாக மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளின் ஊர் எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்த தண்ணீர் தொட்டிகளை தேடி தற்போதெல்லாம் அதிக அளவு காட்டு யானைகள் வந்தபடி உள்ளன. முன்பெல்லாம் மாலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும்தான் பெருவாரியான வனவிலங்குகள் இந்த தண்ணீர் தொட்டிகளை நோக்கி வரும். இப்போதெல்லாம் பகல் நேரங்களிலேயே ஊரை ஒட்டியுள்ள இந்த தண்ணீர் தொட்டிகளுக்கு வந்து விடுகின்றன. நாளொன்றுக்கு 2 முறை இந்த தொட்டிகளில் நீர் நிரப்பினாலும் காலியாகி விடுவதாக தெரிவிக்கின்றனர் இங்கே தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் வன ஊழியர்கள்.
உதாரணமாக மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கிற்கு பின்புறம் 50 மீட்டர் தொலைவில் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக 2 தொட்டிகள் சிறிய, பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. சிறிய தொட்டி மான்கள் போன்ற சிறிய விலங்குகள் நீர் அருந்தவும், பெரிய தொட்டி யானைகள் போன்ற பெரிய விலங்குகள் நீர் அருந்தும் வசதியுடன் வனத்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். முன்பெல்லாம் இதற்கு ஒரு நாளைக்கு ஒரு முறை, இருமுறை ஓரிரு யானைகள் கூட்டம் மற்றும் வனவிலங்குகள் கூட்டம் மட்டுமே வந்து நீர் அருந்தும். அதனால் ஒரு முறை மட்டுமே தொட்டியில் நீர் நிரப்பும் பணி இருந்தது.
இப்போதெல்லாம் தினமும் இடைவெளி விடாமல் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்த வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு வந்த 12 யானைகள் கூட்டம் காட்டுக்குள் நின்றுகொண்டு இரண்டிரண்டு ஜோடியாக தொட்டிக்கு வந்து நீர் அருந்திச் சென்றது. அதைத்தொடர்ந்து 8 யானைகள் கூட்டம் வந்தது. இப்படி யானைகளின் தொடர் வருகையால் சிறு விலங்குகளுக்கான நீர் தொட்டிகளை கூட அவையே காலி செய்து விடுகிறது. எனவே ஒரு நாளைக்கு காலை, மதியம், மாலை என 3 வேளைகளில் தொட்டிகளில் நீர் நிரப்பப்படுகிறது. அவை சுத்தமாகவே காலியாகி விடுவதாக தெரிவிக்கிறார்கள் வன ஊழியர்கள்.
'அரசு மரக்கிடங்குக்கு அருகில் இந்த தொட்டிகள் இருப்பதால், பக்கத்திலேயே மோட்டார் சுவிட்ச்சும் இருப்பதால் ஆழ்குழாய் கிணற்று மோட்டாரை இயங்க விட்டு இந்த தண்ணீர் நிரப்ப முடிகிறது. அந்த மோட்டார் சத்தத்திற்கு அப்போதைக்கு வரும் வன விலங்குகள் ஒதுங்கி நிற்கின்றன. ஆனால் அதுபோல வனப்பகுதிகளில் மற்ற இடங்களில் உள்ள தொட்டிகளில் எல்லாம் நீர் நிரப்ப முடிவதில்லை!' என்கின்றனர் இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்.
அடர்ந்த காட்டிலேயே சுற்றி வரும் புலி கூட இங்குள்ள தண்ணீர் தொட்டியில் நீர் அருந்த வரும் காட்சிகள் வனத்துறையினரால் தொட்டி அருகே பொருத்தபட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது நடுக்காட்டில் நிலவும் கடும் வறட்சியை வெளிக் காட்டுவதாக உள்ளது. வறட்சி காலத்தில் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்துவிடும் என்பதால் இந்த அசம்பாவிதங்களை முடிந்தவரை தடுக்க அணைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், 'தற்போது நிலவும் கடும் சூழலுக்கு இவை போதுமானதல்ல, கூடுதல் நிதிஒதுக்கி காட்டு உயிர்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வனங்களுக்குள் கூடுதல் தண்ணீர் தொட்டிகளை நிரப்பி அடிக்கடி நீர் நிரப்ப வசதி செய்திட வேண்டும். இல்லையெனில் வரும் கோடை காலத்தில் விவரிக்க முடியாத பிரச்சனைகளை தவிர்க்க இயலாது!' என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT