Published : 01 Jun 2017 09:07 AM
Last Updated : 01 Jun 2017 09:07 AM
மத்திய அரசின் மாடுகள் விற்பனை தொடர்பான உத்தரவுக்கு தடை யாணை பெற்றதன் மூலம் ஒரே நாளில் நாடும் முழுவதும் பேசப் படும் நபராகியுள்ளார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.செல்வ கோமதி.
இந்தியாவில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக் காக விற்பனை செய்யவும், கொல்லவும் மத்திய அரசு 23.5.2017-ம் தேதி தடை விதித்தது. இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட் டங்கள் தீவிரமாக நடைபெறுகின் றன. இந்த பரபரப்பான சூழலில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து மத்திய அரசின் உத்தரவுக்கு தடையாணை பெற்றுள்ளார் வழக்கறிஞர் எஸ்.செல்வகோமதி.
இவர் மதுரையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலராக உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக சமூக செயற் பாட்டாளராக உள்ளார். குடும்ப வன்முறை தொடர்பாக ஆராய்ச்சி செய்து அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சுமங்கலி திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த குழுவில் இடம்பெற்றார். அமெரிக்காவின் சர்வதேச பார்வை யாளர் தலைமைத்துவ பயிற்சி திட்டத்தின்கீழ் அமெரிக்க அரசின் விருந்தினராக 2013-ம் ஆண்டில் தேர்வானவர்.
மத்திய அரசு தனது உத்தரவை முழுமையாக திரும்பப்பெறும் வரை சட்டரீதியாக போராடுவதாக செல்வகோமதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
நான் சுத்த சைவம். முட்டைகூட சாப்பிட மாட்டேன். ஒருவர் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்வது அவரின் தனிப் பட்ட உரிமை. அதை கட்டாயப் படுத்தக்கூடாது. சைவ உணவு சாப்பிடுவோரை அசைவ உணவு சாப்பிடக் கட்டாயப்படுத்துவது எவ்வளவு வன்முறையோ, அதே போலத்தான் அசைவ உணவு சாப்பிடுவோரை சைவத்துக்கு மாற கட்டாயப்படுத்துவதும். ஒவ்வொரு வரும் அவரவர் மதம், கலாச் சாரத்தை பின்பற்ற உரிமை உண்டு.
அப்படியிருக்கும்போது மாடு களை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்தது தவறு. இது நாடு தழுவிய பிரச்சினை. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமையை மீறி யது மட்டும் இல்லாமல் மனித உரிமை மீறலும் ஆகும். இதனால் இதை சட்டரீதி யாக எதிர்கொள்ள வேண்டும் என முடிவு செய்து வழக்கு தொடர்ந்தேன்.
எனது வழக்கை ஏற்று மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்திருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. ஏற்கெனவே நாட்டின் பல பாகங்களில் மத்திய அரசின் உத்தரவை அதிகாரிகள் அமல் படுத்த தொடங்கிவிட்டனர். சந்தை களி்ல் கால்நடைகளை விற்க அனுமதி மறுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் நீதிமன்ற தடையால் நிறுத்தப்படும்.
எனவே மத்திய அரசு தனது உத்தரவை திரும்பப் பெறுவது நல்லது. உயர் நீதிமன்ற கிளையின் தடையாணையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் எங்களிடம் கருத்து கேட்காமல் எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்யப்படும்.
ஒருவேளை தடையை விலக்கக்கோரி இதே உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தால் கடுமையாக ஆட்சேபிப்போம். மத்திய அரசு தனது உத்தரவை திரும்பப் பெறும் வரை சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வேன் என உறுதிபடக் கூறினார் செல்வகோமதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT