Published : 28 Apr 2014 10:12 AM
Last Updated : 28 Apr 2014 10:12 AM
சிறந்த ஒரு வீரத்திருமகனை தமிழகம் இழந்துவிட்டது என்று மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவிக்கு முதல்வர் ஜெயலலிதா உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் சோபியனில் தீவிரவாதிகளுடன் சனிக்கிழமை நடந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்தார். அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸுக்கு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தங்கள் கணவர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனையும், பேரதிர்ச்சியும் அடைந்தேன். இது, உங்களது வாழ்விலேயே மிகவும் துக்ககரமான, மோசமான நாள் என்பதை நன்கு அறிவேன். அன்புமிக்க கணவரை இழந்து நீங்களும், பாசமிகு தந்தையை இழந்து உங்கள் மகளும், போற்றி வளர்த்த அன்பு மகனை இழந்து அவரது பெற்றோரும் தவித்து வருகிறீர்கள்.
எனினும், தாய்நாட்டைக் காக்கும் பெரும் பணியை செய்து வரும் இந்திய ராணுவத்தின் தரப்பில் போரிட்டு பெரும் தியாகத்தை அவர் செய்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். சிறந்த வீரத்திருமகனை தமிழகம் இழந்திருக்கிறது. துணிவுமிக்க ஒரு போர்வீரரை நாடு இழந்துள்ளது.
அவரது மறைவுக்கு தமிழக அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை உங்கள் அனைவருக்கும் தருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்களது கணவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT