Last Updated : 10 Oct, 2014 11:51 AM

 

Published : 10 Oct 2014 11:51 AM
Last Updated : 10 Oct 2014 11:51 AM

லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மரண தண்டனை விதித்த மன்னன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்

தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும் அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென் னேஸ்வரமடம் கிராமம். இங்குள்ள பென்னேஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது, பிரசித்திபெற்றது. இந்தக் கோயில் கல்வெட்டில் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரண தண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழு நிலைகளைக் கொண்ட பெரிய ராஜகோபுரம் இருக்கும் கோயில்பென்னேஸ்வர மடம் கோயிலாகும். இது பிற்காலச் சோழர் காலக் கோயிலாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயி லில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. சோழர்கள், போசாளர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சியில் இக்கோயிலுக்கு பலவிதமான கொடைகள், தானங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தானமாகப் பெறப் பட்ட நிலங்கள், ஊர்கள் மற்றும் பொது சொத்துகளை சிலர் ஏய்த்துஅனுபவித்துள்ளனர். இதனை அறிந்த பேரரசன் வீர ராமநாதன் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார். அந்த ஆணை தொடர்பான கல்வெட்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போசாள மன்னன் வீர ராமநாதன் கல்வெட்டு

"ஸ்ரீ வீரராமந்நாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்ணையாண்டார் மடத்தி லும் பெண்ணை நாயனார் தேவதானமான ஊர்களிலும் ஒரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ் செய்வார்களாதல் கூசராதல் ஆரேனுமொருவர் வந்து விட்டது விடாமல் சோறு வேண்டுதல் மற்றேதேனும் நலிவுகள் செய் குதல் செய்தாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலையைஅறுத்துவிடவும் அப்படி செய்திலர் களாதல் தங்கள் தலைகளோடே போமென்னும்படிறெயப்புத்த பண்ணி இதுவே சாதனமாகக் கொண்டு ஆங்கு வந்து நலிந்தவர் களைத் தாங்களே ஆஞ்ஞை பண்ணிக் கொள்ளவும் சீ காரியமாகத்தாங்க . . . த. . . போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மானிய மாகக் குடுத்தோம். அனைத் தாயமு விட்டுக்கு . . .கூசர் உள்ளிட் டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம். இப்படியாதே இதுக்கு விலங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்" என எழுதப்பட்டுள்ளது.

இதன் விளக்கம், லஞ்சம் வாங்கினால், கொடுத்தால் சிரச்சேதம் செய்ய அதாவது தலையை வெட்டும் படியும் அவ்வாறு நிகழாமல் தடுக்கத் தவறினால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் தலையை வெட்டும்படியும் ஆணை வெளியிட்டுள்ளார். இக்கல்வெட்டு கோயிலின் தெற்கு சுவர் பகுதியில் இருக்கிறது. இக்கல்வெட்டு கிரந்தம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ளது.

லஞ்சமாக உணவு அல்லது சோறு கேட்டால் கூட குற்றம் என்றும் அரசர் சொல்லியிருக்கிறார். மேற் கண்ட பேரரசர் வீரராமநாதனின் கல்வெட்டைக் கொண்டும், தலைபலிக் கற்களின் சிற்ப அமைப்பைக் கொண்டும் இவ்வாறு தண்டிக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது தெரிகிறது. இது தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.

இந்தக் கல்வெட்டை போசாளப் பேரரசன் வீரராமநாதனின் நாற்பத்தி ஒன்றாவது ஆட்சியாண்டில் இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டிருக் கிறது. கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு கி.பி.1295 என குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு, பொதுமக்களின் நலனுக்காக அல்லது அரசனின் நலனுக்காக பக்தியில் கொற்றவை என்னும் காளிக்குப் படையலாகவும் தங்கள் தலையைத் தாங்களே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.

இதில் நவகண்டம் என்பது, உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கடைசியாக தன் தலையை அறுத்துக் கொள்வது. அரிகண்டம் என்பது ஒரே வெட்டில் சிரத்தை அறுத்து சமர்ப்பிப்பது. இது தொடர்பான கல்வெட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் உள்ளன. அதுவும் போசாளர்களின் தலை நகரான ஹளேகுந்தாணியிலும், பையூர் நிலையுடையான் மதுராந்த கன் வீரநுளம்பன் ஆட்சி செய்த பென்னேஸ்வர மடத்திலும்தான் இருக்கின்றன.

தலைபலிக் கற்களை நவகண்டம் அல்லது அரிகண்டம் என்றுதான்நினைத்திருந்தனர்.

இந்த தலைபலி கற்களையும் கோயில் கல்வெட்டுகளையும் ஆராய்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன், லஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரியின் உயிர்பலி கல்வெட்டு என்பதை கண்டறிந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x