Published : 14 Mar 2014 12:49 PM
Last Updated : 14 Mar 2014 12:49 PM
ரூபாய் நோட்டுகள் போல தோற்றம் உடைய பொம்மை ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.1 கோடி மோசடி செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை எழும்பூர் காவல் உதவி ஆணையர் கலிதீர்த்தன் தலைமையிலான காவலர்கள் புதன் கிழமை இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அண்ணாசாலை புகாரி ஓட்டல் அருகே சந்தேகப்படும் வகையில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு பையை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் யாருக்காகவோ காத்திருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவர்கள் அருகே சென்றனர். அப்போது மூன்று பேரும் தப்பி ஓட முயன்றனர்.
காவலர்கள் விரட்டி சென்று மூன்று பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, குழந்தைகள் விளையாடும் பொம்மை ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்தன. ரூ.1 கோடி அளவுக்கு அந்த பொம்மை ரூபாய் கட்டுகள் இருந்தன.
ஒவ்வொரு கட்டிலும் மேலும் கீழும் மட்டும் சில நல்ல நோட்டுகள் இருந்தன. இதனைப் பார்த்த காவலர்கள் யாரையோ ஏமாற்றுவதற்காக மூன்று பேரும் திட்டமிட்டு பொம்மை ரூபாய் கட்டுகளுடன் காத்திருப்பதை தெரிந்து கொண்டனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த நாகூர்கான்(34), அவரது சகோதரர் ரசூல்கான்(32), கண்ணதாசன் நகரை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், “இவர்கள் மூன்று பேருக்கும் குமார் என்பவர் பழக்கமானவர். இவர் பர்மா பஜாரில் எலக்ட்ரானிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். ‘ரூ.15 லட்சம் நல்ல ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் கிடைக்கும்’ என்று குமாரிடம் மூன்று பேரும் கூறியுள்ளனர். பிறகு அவருக்கு பொம்மை ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்துள்ளனர். குமார் வருவதற்கு தாமதமானதால் மூன்று பேரும் சிக்கிக் கொண்டனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT