Published : 11 Apr 2017 01:36 PM
Last Updated : 11 Apr 2017 01:36 PM
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மகன் மற்றும் தம்பி ஆகியோரைக் கைது செய்ய, ஏப்ரல் 13-ம் தேதி வரை தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் கடந்த 6-ம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது டிடிவி தினகரன் தரப்பினருக்கும், ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா உள்ளிட்டவர்கள் மீது ஆர்.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ரவீந்திரநாத் குமார், ஓ.ராஜா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நேற்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு வரவில்லை என்பதால் நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பாக மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, உடனடியாக மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையீடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் ஆர்.கே.நகர் போலீஸாரைப் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அத்துடன் ஓபிஎஸ் மகன் மற்றும் தம்பி ஆகியோரைக் கைது செய்ய ஏப்ரல் 13-ம் தேதி வரை தடை விதித்தும் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT