Last Updated : 10 Jun, 2017 09:25 AM

 

Published : 10 Jun 2017 09:25 AM
Last Updated : 10 Jun 2017 09:25 AM

விளைபொருட்களை மதிப்பு கூட்டிய பொருளாக்கி விவசாயிகளே விற்க புதிய ஏற்பாடு: கூடுதல் வருவாய்க்கு வழிவகை செய்யும் வேளாண் துறை

மானாவாரி பயிர்களான பயறு வகைகள், சிறுதானியங்கள், எண் ணெய் வித்துகளை விவசாயிகளே மதிப்பு கூட்டிய பொருட்களாகத் தயாரித்து, விற்று கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு வேளாண்மைத் துறை வழிவகை செய்துள்ளது.

மானாவாரி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக ரூ.803 கோடியில் “நீடித்த மானாவாரி விவசாயத்துக்கான இயக்கம்” என்ற நான்காண்டு திட்டத்தை வேளாண்மைத் துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத் தின் மூலம், மானாவாரி பயிர் அதிக மாகச் சாகுபடி செய்யப்படும் 25 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கரில் மானாவாரி விவசாயம் மேம்படுத்தப்பட உள்ளது. இந்தாண்டு 5 லட்சம் ஏக்கரிலும், அடுத்து வரும் 2 ஆண்டுகளில் தலா 10 லட்சம் ஏக்கரிலும் மானாவாரி விவசாயம் மேம்படுத்தப்படும்.

இந்தாண்டு (2016-17) ரூ.13 கோடியே 35 லட்சத்தில் 200 மானாவாரி தொகுப்புகள் உருவாக் கப்படுகின்றன. ஒரு தொகுப்பில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் இருக்கும். இதற்காக ஒன்று அல்லது இரண்டு கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மானாவாரி சாகுபடி நிலங்கள் தேர்வு செய்யப்படும். இந்தாண்டு மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் மானாவாரி விவசாயம் மேம்படுத்தப்படவுள்ளது.

முதல்கட்டமாக கிராம பஞ்சா யத்து அளவில் விவசாயக் குழுக் கள் அமைக்கப்பட்டு, அதனை கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணி நடக்கிறது. ஒரு குழு வுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப் படுகிறது. இதுவரை 25 மாவட்டங் களில் 837 விவசாயக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக் களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், அந்தப் பகுதி வேளாண் அலுவலர் களுக்கும் “நீடித்த மானாவாரி விவசாய இயக்கம்” என்ற திட்டத் தின் நோக்கம், அதன் செயல்பாடு கள் பற்றியும் விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 3 ஆயிரம் விவசாயிகளுக்கும், ஆயிரம் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில், சிறுதானியப் பயிர்களான சோளம், மக்காச் சோளம், கம்பு, ராகி, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி; பயறு வகைகளான உளுந்து, துவரை, பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை; எண்ணெய் வித்துகளான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகியவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, பின்னர் அவற்றை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றுவது, அதற்கு ‘பிராண்ட் பெயர்’ சூட்டி, இடைத்தரகர், வியாபாரிகள் தலையீடு இல்லாமல் விவசாயக் குழுக்களே நேரடியாக விற்பது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

இதுகுறித்து வேளாண் துறை உயர் அதிகாரி கூறியதாவது:

தமிழகத்தில் கோடை மழை நன்றாகப் பெய்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் கோடை உழவு முடிந்துள்ளது. உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.500 கொடுக்கப்படுகிறது. விதையும், உயிர் உரமும் பாதி விலையில் வழங்கப்படுகின்றன.

அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடர்பு மையமாக செயல்படும்.

இந்த வங்கிகள், விவசாயக் குழு ரூ.4 லட்சத்தில் குடிசைத் தொழில் தொடங்க உதவும். அதைக் கொண்டு சிறிய பயறு உடைக்கும் கருவி, விசை செக்கு போன்றவற்றை அமைக்க முடியும். வரகு இட்லி மற்றும் தோசை, கேழ்வரகு வடை, கேழ்வரகு பக்கோடா, குதிரைவாலி அடை, குதிரைவாலி சப்பாத்தி போன்ற மதிப்புக் கூட்டிய பொருட்களை விவசாயிகளே தயாரித்து விற்று கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு வழிவகை செய்வதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x