Published : 04 Feb 2014 12:00 AM
Last Updated : 04 Feb 2014 12:00 AM
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது.
அதில் உரையாற்றிய ஆளுநர், "கடந்த நிதியாண்டு 2012-13ல் தமிழக பொருளாதார வளர்ச்சி 4.14% ஆக குறைந்துள்ளது, இருந்த போதிலும் தமிழக அரசு சமச்சீரான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளது. அதனால் வருங்காலத்தில் பொருளாதாரத்தின் எல்லா துறைகளும் வளர்ச்சியடையும்’’ என்று கூறியுள்ளார். இந்த பொருளாதார சரிவுக்கு என்ன காரணம்? மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டு பொருளாதாரம் சரிந்தது. அதனுடன் தமிழக பொருளாதாரமும் சரிந்தது" என்பதுதான் ஆளுநர் உரையில் கூறப்பட்ட விளக்கம்.
பொருளாதார அமைப்பு
இந்திய பொருளாதார வளர்ச்சி யுடன் இணைந்தே தமிழக பொருளாதாரம் இருக்க வேண்டும். இதற்கு முக்கியக் காரணம். இந்திய பொருளாதார அமைப்பு போலவே தமிழக பொருளாதாரமும் இருப்பதுதான்.
உலகமயமாக்கல் உடனடியாகவும் பெரிய அளவிலும் பாதிக்கக்கூடிய தொழில், பணிகள் துறைகள் நம் மாநில பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
இந்திய பொருளாதாரத்தில் இந்த இரண்டு துறைகளின் பங்களிப்பு 2004-05ல் 81%ல் இருந்து 2012-13ல் 86.3% ஆக உயர்ந்தது.
இதே காலத்தில் தமிழக பொருளாதாரத்தில் இந்த இரு துறைகளின் பங்களிப்பு 89.9%ல் இருந்து 92.3% ஆக உயர்ந்துள்ளது. எனவே, உலகமயமான பிறகு, நம் நாட்டு பொருளாதார வளர்ச்சியில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் தமிழத்தையும் பாதிக்கின்றன.
உலக பொருளாதாரத்தோடு நெருக்கம்
இந்தியா மற்றும் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வரைபடம் அருகே உள்ளது. அதை பார்க்கும்போது 2004-05ல் இருந்து எப்போதெல்லாம் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்ததோ, அப்போதெல்லாம் தமிழக வளர்ச்சி விகிதம் அதைவிட அதிகமாகவே இருந்துள்ளது.
எப்போதெல்லாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்ததோ அப்போதெல்லாம் தமிழக வளர்ச்சி விகிதம் அதைவிட அதிகமாகவே குறைந்திருக்கிறது.
இந்தியாவைவிட தமிழக பொருளாதாரம் உலக பொருளா தாரத்தோடு நெருக்கமாகவே ஒட்டியிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்தித்தே ஆகவேண்டும்.
உலகமயமான தமிழக பொருளாதாரம்
இந்த பொருளாதார சிக்கலில் இருந்து தப்புவது கடினம். கூட்டாட்சியில், வெளிநாட்டு உறவு, பன்னாட்டு பொருளாதார ஒப்பந்தம் செய்யும் அதிகாரம் எல்லாம் மத்திய அரசிடம் இருக்கும்போது, நாம் மட்டும் தனித்து இயங்க முடியாது.
இந்நிலையில், பல ஆண்டுகளாக இங்கு உற்பத்தி தொழில், மென் பொருள் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் என்ற பல ஏற்றுமதி தொழில்களை வளர்த்துள்ளோம். இவை அனைத்தும் உலக பொருளாதார போக்குக்கு ஏற்ப மாறக்கூடியவை என்பதும் நமக்கு தெரியும்.
உலகமயமாக்கல் நம்மை தீவிரமாகவே பாதிக்கும் என்பதை மறுக்க முடியாது. இதனுடன் மத்திய அரசின் நிதிக்கொள்கைகளும்,
அதனால் ஏற்படும் நிதி, அந்நிய செலாவணிச் சிக்கல்களும் (Financial and Foreign Exchange Crises) நம்மை விடாது.
2010-11 தொடங்கி உற்பத்தி தொழில்களின் பங்களிப்பு தமிழகத்தில் வேகமாக குறைந் துள்ளது. ஏற்றுமதி குறைந்தது, உள்நாட்டுத் தேவை குறைந்தது ஆகியவை இதற்கு காரணமாக இருந்தாலும், மின்சாரம் இல்லாமையும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
கண்டுகொள்ளப்படாத விவசாயம்
இது ஒருபுறம் இருக்க.. பன்னெடுங்காலமாக நாம் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை புறம் தள்ளிவிட்டோம் என்பதும் இன்னொரு முக்கியக் காரணம். இதனால் இந்த துறையின் வீழ்ச்சி அண்மைக்காலத்தில் வேகமாகவே உள்ளது.
சென்ற நிதியாண்டு நாட்டின் பொருளாதாரத்தில் 13.7% பங்களிப்பை செய்துள்ள விவசாயமும் அதனை சார்ந்த துறைகளும், தமிழக பொருளா தாரத்துக்கு 7.3% பங்களிப்பை மட்டுமே செய்துள்ளன. 1993-94ல் விவசாயப் பயிர்கள் உற்பத்தி 100 என்ற அளவில் இருந்து 2010-11ல் 118.10 என்றுதான் அதிகரித்துள்ளது. அதாவது 18.1% வளர்ச்சி அடைந்துள்ளது, சராசரியாக ஆண்டுக்கு 1% மட்டுமே.
விவசாயத் துறை உற்பத்தி ரீதியில் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், அத்துறை எப்போதெல்லாம் வளர்கிறதோ அப்போதெல்லாம் தமிழக பொருளாதாரமும் வளர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டுகூட, தொழில் துறையில் பெரிய தொய்வு இல்லையென்றாலும், விவசாயத் துறையின் பங்களிப்பு குறைந்ததால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் சரிந்தது.
விவசாயத்துக்கும் மற்ற துறைகளுக்கும் ஆக்கப்பூர்வமான தொடர்பு உண்டு. விவசாயம் வளரும்போதெல்லாம், மற்ற துறை உற்பத்திக்கு அதிக தேவை ஏற்படும். அதேபோல, மற்ற துறைகளும் விவசாய உற்பத்திப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும்.
தமிழகப் பொருளாதாரம் வளர..
வரும் காலத்தில் உலகமயமாக்கலின் சிக்கல்களுக்கு நடுவிலும் தமிழக பொருளாதாரம் வளர வேண்டும் என்றால், விவசாயமும் அதைச் சார்ந்த துறைகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மின்சாரம் தொடங்கி அனைத்து பொருளாதார அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் பெருக வேண்டும். பொருளாதாரக் கொள்கைகள் தீட்டுவதில் ஜனநாயகப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். நாடாளுமன்றமும் சட்டமன்றமும் மட்டுமே விவாத மேடைகள் அல்ல. விருப்பு வெறுப்பற்ற பொது விவாதத்துக்கு இடம் வேண்டும்.
விவசாயிகளைத் தவிர மற்றவர்களுக்கு விவசாயம் பற்றி எள் மூக்கின் முனை அளவு கூட தெரியாது. அதனால், விவசாயக் கொள்கைகளைத் தீட்டுவதில் விவசாயிகள் பங்கு கொள்ள வேண்டும்.
மற்ற துறைகளில் அத்துறை சார்ந் தவர்களுடன், நிபுணர்களும் பங்கு கொள்ள வேண்டும். பொது நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளே எல்லா முடிவுகளையும் எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக, துறை சார்ந்த நிபுணர் களும் அனுபவசாலிகளும் கொள்கை களையும் திட்டங்களையும் வரைந்தால் மட்டுமே இந்தியாவில், தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT