Published : 21 Feb 2014 07:08 PM
Last Updated : 21 Feb 2014 07:08 PM
தென் தமிழக மாவட்டங்களின் கடலின் தன்மை மற்றும் மீன் வளம் குறித்த தகவலை துல்லியமாக தெரிந்து கொள்ள, தூத்துக்குடி கடல் பகுதியில், கடல் அலை மிதவை கருவி வெள்ளிக்கிழமை நிறுவப்படுகிறது.
தேசிய கடல் தகவல்கள் சேவை மையம் (இன்காய்ஸ்), எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஆகியவை சார்பில், கடல் நிலை தகவல்களை அறியவும், மீனவர்களுக்கு உதவுவதற்காகவும், துறைமுக மேம்பாட்டுக்காகவும், அலை சவாரி மிதவை ஒன்று வெள்ளிக்கிழமை (பிப்.21) காலை ஆழ்கடலில் மிதக்க விடப்படுகிறது.
கடலடியில் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து, அவற்றை இன்காய்ஸ் மையத்துக்கு தகவல் அனுப்பும்.
அதுபோல், கடல் அலையின் உயரம், காற்றின் வேகம் மற்றும் திசை குறித்த கணிப்பை முன் கூட்டியே அளிக்கும். இதன் மூலம் சிறு படகு மற்றும் கட்டுமரத்தில் தொழில் செய்யும் மீனவர்களுக்கு, சேதங்களைத் தவிர்ப்பதுடன், உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.
மீனவர்களின் நலன் கருதி இன்காய்ஸ் நான்கு நாட்களுக்குரிய தகவல்களை ஒவ்வொரு 6 மணி நேர இடைவெளியில் கணித்து வழங்கும். இத்தகவல்கள் ஆண்டு முழுவதும் வழங்கப்படுவதால், சிறு மீனவர்களுக்கு அதிக பயனுள்ளதாக அமையும். இதன் கணிப்பு 90 முதல் 100 சதவீதம் சரியாக இருப்பதாக தொடர் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ரூ.40 லட்சம்
இத்தகவல்கள் பொதுவான தாக இல்லாமல் அந்தந்த கடற்கரை பகுதிக்கு ஏற்ற வகையில் துல்லியமாக கணக்கிட்டு கூறுவதால், சிறு மீனவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதவையின் மதிப்பு ரூ. 40 லட்சம்.
மிதவையின் சிறப்பு அம்சங்கள்
கடல் அலை மற்றும் கடல் காற்றின் தன்மை, மீன் வளம், கரையிலிருந்து 10, 20, 50, 100 கி.மீ. தூர இடைவெளியில் ஏற்படும் அலை உயரம் குறித்த தகவல்களை, இக்கருவி துல்லியமாக கணித்து ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் வழங்கும். கடலில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் நேரங்களில் ராட்சத அலைகள் உருவாகும். இக்காலக் கட்டங்களில் இன்காய்ஸ் உரிய நேரத்தில் கிராம அறிவு மையங்களுக்கு மின்னணு கருவிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கும்.
இத்தகவல்களை மீனவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், எஸ்.எம்.எஸ். மற்றும் ஒலிவடிவ குறுஞ்செய்தி மூலம் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து வழங்கும். இதன் மூலம் மீனவர்களுக்கு மட்டுமின்றி, துறைமுகத்துக்கும் பல அரிய தகவல்களை பெற முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT