Published : 01 Jan 2016 10:11 AM
Last Updated : 01 Jan 2016 10:11 AM
சுதந்திரம் கிடைத்த இத்தனை ஆண்டுகளில் சென்னை அடைந்துள்ள வளர்ச்சிக்கு அது கொடுத்த விலை நீர்நிலை கள்தான். பல இடங்களில் நீர்நிலை களின் பரப்பு 70% காணாமல் போய் விட்டது. சில இடங்களில் நீர்நிலை களே காணவில்லை. இதுதான் சென்னை தத்தளிக்க காரணம். இதுவே, நீராதாரங்களை பாது காக்க வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளியுள்ளது என்கிறார் ஜெயஸ்ரீ.
‘கேர் எர்த்’ அமைப்பின் நிறுவனர் களில் ஒருவரான ஜெயஸ்ரீ, கடந்த 15 ஆண்டுகளாக காடும் நீரும் சார்ந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரு கிறார். மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு கடற்கரை சாலை என தமி ழகத்தின் இரு கரைகளிலும் கரை யும் வனங்களையும் , நீர்நிலைகளை யும் பேணுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது அவரது அமைப்பு.
‘‘தவழும் நதி, அடர் வனம், பூச்சொரியும் நந்தவனம் இப்படி பல பக்கங்களை கொண்ட பூமி ஒரு உருண்டையான கவிதை புத்தகம். பிளாஸ்டிக், புகை, ஆக்கிரமிப்பு என்று நாம் அதன் பக்கங்களை அரித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டதன் விளை வாகத்தான் 2000-ல் கேர் எர்த் அமைப்பை தொடங்கினோம்’’ என்கிறார் ஜெய.
மேலும் அவர் கூறியதாவது: அறிவியல் ரீதியாக நீர்நிலைகளை எப்படி எல்லாம் பாதுகாப்பது என்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடங்கிய பயணம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கொரட்டூர், ரெட்டேரி, நாகை, மரக்காணம் என்று காடுகளையும் நீர்நிலைகளையும் சுற்றி வருகிறது.
காடுகளும், நீர்நிலைகளும்தான் பூமியின் பூர்வகுடிகள். பூர்வ குடிகளை மதிக்காத இனம் அழி வின் விளிம்பில் நிற்கிறது என்று பொருள். எனவே, நாங்கள் காடுகளையும், நீர்நிலைகளையும் காப்பாற்றுவதற்கான அறிவியல் தீர்வுகளை முன்வைத்து வரு கிறோம். அரசிடமும் பல அறிக் கைகளை அளித்துள்ளோம். கொள்கைகள் அமைக்க வேண்டி வலியுறுத்தியுள்ளோம்.
நிலப்பரப்பு எப்படியெல்லாம் மாறுகிறது என்று திருநெல்வேலி களக்காடு, நாகப்பட்டினம்- வேதாரண்யம் , ஈரோடு சத்தியமங்கலம், திருவான்மியூர் மரக்காணம் என ஆய்வுகளை நடத்தினோம். நிலத்தில் பெரும் மாற்றங்களை சந்தித்தது நீர்நிலை கள் மட்டும்தான்.
குறிப்பாக தலைநகர் சென் னையில் ஏகப்பட்ட மாற்றங்கள். இன் னொருபுறம் வனமும் அழித்தொழிக் கப்படுகிறது. ஆற்றுப்படுகைகளில் இருந்த வனப் பகுதிகளை இது வரை யாரும் கணக்கில் கொண் டதே இல்லை. அவை சத்தமில் லாமல் அழிக்கப்பட்ட நிகழ்கால சாட்சியங்களை காவிரிக்கரை யோரம் காணலாம்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ஆய்வுதான் எங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி யது. ஒருபுறம் பெரும் ஐடி நிறு வனங்கள், மறுபுறம் பெரும் குப்பை மேடு, இன்னொரு புறம் ஆதி வாழ்விடத்திலிருந்து துரத்தப்பட்ட பூர்வகுடிகள் என்று பள்ளிக் கரணை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் கொஞ்சம் வித்தியாச மானது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத் தின் முக்கால்வாசி இடங்கள் இன்று ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விட்டன. பெரிய பெரிய கட்டிடங் கள், நிறுவனங்கள், வீடுகள் அமைக் கப்பட்டுவிட்டன. இதன் விளை வாகத்தான் டிசம்பர் 1,2 தேதிகளில் பள்ளிக்கரணை சாலையில் ஆளை மூழ்கடிக்கும் வெள்ளம் சென்றது.
அடையாற்றின் கதையும் அப் படித்தான். இன்றைக்கு மழைவிட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியா யிற்று. அடையாறு வறண்டு கிடக்கிறது. நூல் பிடித்ததுபோல சாக்கடை ஓடுகிறது. குடியானவர் போல பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தனது உடலை சுருக்கிக் கொண்டுவிட்டது. தவறு நம்மிடம் இருக்கிறது. இந்த தவறுக்கான தீர்வு நீராதாரங்களை பேணுவது தான். இந்த முயற்சி ஒவ்வொரு தனி மனிதரிடமிருந்தும் வர வேண்டும். சென்னையில் எல்லா இடமும் கடல் மட்டத்திலிருந்து ஒரே உயரத்தில் இருக்காது. மயிலாப்பூர் வேறு, வேளச்சேரி வேறு. இப்படி ஹைட்ராலஜி தொழில்நுட்பம் எல்லாம் பாமர மக்களுக்கு தெரியாது. இவற்றை அரசு நெறிப்படுத்தி வழிமுறைப்படுத்த வேண்டும்.
வெள்ளத்தின் போது நிவாரணம் வழங்கியது, பாதிக்கப்பட்டோரை மீட்டதுடன் இளைஞர்களின் பணி முடியவில்லை. இன்னொரு வெள்ளம் இனி வேண்டாம் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதுதான் வெள்ள மீட்புப் பணி முழுமையடையும் புள்ளியாக இருக்க முடியும்.
இவ்வாறு கூறி சிநேக புன்னகை வீசுகிறார் ஜெயஸ்ரீ.
(இணைவோம்.. இணைப்போம்..)
இயற்கையை நேசிப்பவரா நீங்கள்? நம்முடைய சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஆர்வம் உள்ள யாவரும், ‘யாதும் ஊரே’ திட்டத்தில் பங்குபெறலாம். உங்கள் விருப்பத்தை yadhum.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு 9025601332 / 7358686695 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT