Published : 16 Jun 2017 08:56 PM
Last Updated : 16 Jun 2017 08:56 PM
மத்திய அரசு அளித்த எந்த நிதியை தடுத்தேன்? - அதற்கான கோப்பினை அமைச்சர்கள் காட்ட முடியுமா? - இது சவால் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். அதேபோல் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்விக்கும் பதிலளித்தார்.
சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் ஆளுநர் செயலாளர் தேவநீதிதாசும் வாதியாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தீர்ப்பு வெளியானது.
அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுச்சேரியில் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் கடும் இன்னலுக்கு ஆளாகி இருந்தனர். சேர்க்கை மறுக்கப்பட்ட நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் அவர்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. இப்பிரச்சினையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் நிலை பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியதால் ஆளுநர் மாளிகை தலையிட நேரிட்டது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, பல்கலைக்கழக மானியக்குழு ஆகியோர் கொண்ட கமிட்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் தொடர்பாக நிர்ணயிக்கும் வரை தற்காலிகமாக ரூ.10 லட்சத்தை வாங்கிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
என்னுடைய உத்தரவின்படி தான் துணைநிலை ஆளுநர் செயலர் தேவநீதிதாஸ் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வாதியாக இணைந்து கொண்டார். அரசின் செயல்பாடுகளில் வேறுபாடு எழுந்ததால், நானே இந்நடவடிக்கையை மேற்கொண்டேன்.
சென்டாக் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை ஏற்பட தற்போதுள்ள அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். தற்போதுள்ள குழுவை நீக்க வேண்டும்.
நான் பணி விதிகளின்படி தான் செயல்படுகிறேன். எனது அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என மாநில அரசு விரும்பினால் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. இதை செய்ய வேண்டியது மத்திய அரசாகும். சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும். அனைத்து அதிகாரங்களும் சட்டத்துக்குட்பட்டது தான். விதிகளில் திருத்தம் செய்தால் அதற்கேற்றவாறு செயல்படுவேன்.
எந்த அமைச்சராவது தைரியமாக கூற முன்வருவார்களா? இதை சவாலாக விடுக்கிறேன். நான் எந்த நிதியைத் தடுத்தேன் எனக்கூற முடியுமா?. அந்த கோப்பை காண்பிக்க முடியுமா'' என்று கிரண்பேடி குறிப்பிட்டார்.
மேலும் புதுச்சேரியில் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது குறித்து கேட்டபோது, ''நீங்களே இப்பிரச்சினையை எழுப்பலாம். ஒவ்வொருவருக்கும் பொறுப்புள்ளது. ராஜ்நிவாஸ் குழு ஆராய்ந்து செயலாற்றும்'' என்றும் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT