Published : 23 Mar 2014 11:14 AM
Last Updated : 23 Mar 2014 11:14 AM

இயற்கை வளங்களைப் பாதுகாக்க சட்டத்தில் மாற்றம் வேண்டும்: அரசு தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் பேச்சு

இயற்கை வளங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் எடுத்துச் செல்வதைத் தடுக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவர் எ. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு வர்த்தகச் சங்கத்தின் 70 வது தொழில் கூட்டம் மற்றும் ஆண்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்குச் சங்கத்தின் தலைவர் சோழநாச்சியார் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் பேசியதாவது:

தொழில் துறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. சுயதொழில் செய்யும் தொழில்முனைவோர்கள் ஈடுபாடு, அர்ப்பணிப்பு, கவனம், தைரியம் ஆகிய நான்கு கடமைகளைக் கடைபிடிக்க வேண்டும். இதனைக் கடைபிடிப்பவர்களுக்குத் தொழிலில் பல எதிர்ப்புகள் வந்தாலும் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவர் எ. நவநீதகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் 5 ஆயிரத்து 566 அரசு பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அந்நிய நேரடி முதலீடு மற்றும் உலக வர்த்தக நிறுவனத்தால் பல அந்நிய நாட்டு கம்பெனிகள் இந்தியாவில் நுழைந்துள்ளன. இந்த அந்நிய நாட்டு கம்பெனிகள் நாட்டில் உள்ள இயற்கை வளங்களை எடுத்துச் செல்கின்றன. இதனைக் கட்டுப்படுத்தப் போதுமான அரசியல் அமைப்பு சட்டம் நம்மிடம் இல்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டத் தில் மாற்றம் கொண்டுவராமல் நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு வர்த்தகச் சங்கத்தின் 70 வது ஆண்டு விழாவையொட்டிச் சோழநாச்சியார் அறக்கட்டளை விருது சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர் கே. மாரிக்கு வழங்கப்பட்டது.

நல்லி குப்புசாமி செட்டியார் விருது ஆரணி மாவட்டத்தைச் சேர்ந்த புடவை வடிவமைப்பாளர் ஜெயந்தி தனசேகரன் மற்றும் நெசவாளர் உதயகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x