Published : 11 Jun 2017 11:47 AM
Last Updated : 11 Jun 2017 11:47 AM
பள்ளியின் நுழைவுப் பகுதியில் நின்று கொண்டிருக்கும் அழகான யானை சிலைகள்; சலசலவென சப்தத்துடன் செயற்கை நீரூற்று; நீர் விழும் இடத்தில் வெண்மை நிற கொக்குகள், மான்கள்; ஒட்டகம் சிலைகள்; மாணவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு பலகைகள்; நூற்றுக்கணக்கான மூலிகைகள் நிறைந்த பூங்கா, கலையரங்கம்... இத்தனைக் காட்சிகளையும் ஓர் அரசுப் பள்ளியில் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தனஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இத்தனைச் சிறப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன.
1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள்; யோகா, கராத்தே என மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்க்கும் பல பயிற்சிகளும் உண்டு. ஆசிரியர்களும், மாணவர்களும் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் இயல்பாகப் பேசிக் கொள்வதைக் காண முடிந்தது.
நவீன ஸ்மார்ட் கிளாஸ்
அகன்ற டிஜிட்டல் திரையில் பாடம் பயிற்றுவிக் கும் நவீன ஸ்மார்ட் கிளாஸ் வசதியும் உள்ளது. நூலகத்துக்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளியில் புதிதாகச் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பூச்செடியோ அல்லது மூலிகைச் செடியோ தரப்படுகிறது. அந்தச் செடி உள்ள தொட்டியில் மாணவரின் பெயர் ஒட்டப் பட்டிருக்கும். அந்தச் செடிக்கு அந்த மாணவர் தினமும் தண்ணீர் ஊற்றி, அதனைப் பராமரித்து வர வேண்டும். இயற்கையை நேசிக்கும் மனப்பான்மையை இளம்பருவத்திலேயே வளர்க்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஆத்தனஞ்சேரி பள்ளிக்கு இப்போது ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது. இதன்மூலம் இங்கு கல்வித்தரம் எந்த அளவுக்குப் பராமரிக்கப்படுகிறது என் பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
“ஆத்தனஞ்சேரி மட்டுமின்றி, ஆரம்பாக்கம், அமலாம்பாக்கம், படப்பை, கரசங்கால், சாலமங் கலம், ஒரத்தூர் என சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். தரமானக் கல்வியை அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளதுதான் இதற்கு காரணம்” என் கிறார் தலைமையாசிரியர் ஆர்.சாந்தி. இந்தப் பெருமைகள் அனைத்தும் தனக்கு முன் தலைமையாசிரியராக இருந்த சுகிகலாவையேச் சேரும் என்கிறார் அவர்.
கடந்த 2011-ம் ஆண்டு ஆத்தனஞ்சேரி பள்ளியில் தலைமையாசிரியராக லா.சுகிகலா பொறுப்பேற்றார். அப்போது 180 மாணவர்கள் இருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அப்போது மாணவர் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்திருந்தது. பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காலகட் டத்தில், ஆத்தனஞ்சேரி பள்ளியில் மாணவர் களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளியை மேம்படுத்த லா.சுகிகலா மேற்கொண்ட முயற்சிகளே இதற்கெல்லாம் காரணம் என்கின்றனர் ஊர் மக்கள்.
இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மலர்ச் செடிகளை விநியோகித்து வரவேற்கும் ஆசிரியர்கள் | படங்கள்: க.ஸ்ரீபரத் |
பள்ளியை மேம்படுத்திய விதம் பற்றி லா.சுகிகலா கூறியதாவது:
‘‘பல அரசுப் பள்ளிகளைப் போலவே எங்கள் பள்ளிக்கும் ஏழைக் குழந்தைகள் மட்டுமே வந்தனர். 90 சதவீதம் குழந்தைகளின் பெற்றோர் தினசரி கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தக் குழந்தைகள் காலையில் எழுந்திருக்கும் முன்னரே அவர்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். இரவில் வேலை முடிந்து வருவதற்கு முன் குழந்தைகள் தூங்கி விடுவார்கள். இதனால் குழந்தைகளின் கல்வி மீது கவனம் செலுத்தவோ, அக்கறை காட்டவோ அந்தப் பெற்றோரால் முடியாது.
பெற்றோர் சந்திப்பு
இந்தச் சூழலை நானும், எனது ஆசிரியர் களும் புரிந்து கொண்டோம். வெறும் ஆசிரியர் களாக மட்டுமல்லாமல், இந்தக் குழந்தைகளை அரவணைத்து அன்பு செலுத்த வேண்டிய தாயா கவும், தந்தையாகவும் மாற வேண்டியிருப்பதை உணர்ந்து, அதற்கேற்ப நாங்கள் பணியாற்றி னோம். குழந்தைகளின் நிலை பற்றி மாதம் ஒருமுறை பெற்றோர் அனைவரையும் வரவழைத் துப் பேசினோம்.
ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு விடுமுறை. ஆனால் அன்றைக்குதான் குழந்தைகளின் பெற் றோருக்கு ஓய்வு நாள். மற்ற நாட்களில் பெற் றோர்களின் கூட்டத்தை கூட்டினால், அவர்கள் ஒருநாள் கூலியை இழக்க வேண்டியிருக்கும். அதனால் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றோர்களை வரவழைத்தோம். குழந்தை களின் கல்வி வளர்ச்சிக்காக நாங்கள் செய்யும் பணிகளை அவர்களுக்கு எடுத்துச் சொன்னோம். தங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்குப் புரிய வைத்தோம்.
வீடியோ படங்களின் உதவியுடன் நடத்தப்படும் செயல்பாட்டு வழி வகுப்புகள். |
இதற்கிடையே ஊரில் இருக்கும் நல்லுள்ளம் கொண்ட வசதி படைத்தவர்களை சந்தித்துப் பேசினோம். பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்த அவர்களின் உதவியை நாடினோம். பள்ளியில் எந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும், முதலில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் விவாதித்து முடிவு செய்வோம். பள்ளியின் ஒவ்வொரு வளர்ச்சி பணியிலும் பெற்றோர்களை முழுமையாக ஈடுபடுத்தினோம். எங்கள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக வலுவான அமைப்பாக மாறியது. இத்தகைய சிறப்பான நிலையை எங்கள் பள்ளி எட்டுவதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துடிப்பான செயல்பாடே முக்கிய காரணம்.
பள்ளி வளர்ந்த விதம் குறித்து சுகிகலா இவ்வாறு அடுக்கிக் கொண்டே சென்றார்.
இந்தப் பள்ளிக்கென சுமார் 70 நிரந்தர நன் கொடையாளர்கள் உருவாகியிருப்பதாக பெற் றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜி.ஜோதி குமார் கூறுகிறார். “பள்ளி நாளுக்கு நாள் வளர்ச்சி பெறுவதைக் கண்டு நன்கொடையாளர்கள் ஆர்வ முடன் நிதியுதவி செய்து வருகின்றனர். அருகாமை யில் உள்ள பல தொழில் நிறுவனங்களும் பள் ளிக்கு உதவ முன்வந்துள்ளன. ஆகவே, பள்ளியை மேலும் மேம்படுத்துவோம்” என்கிறார் அவர்.
காலை உணவு திட்டம்
பள்ளியின் வளர்ச்சிப் பாதையில் அடுத்தகட்ட மாக தனியார் நிதியுதவியுடன் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கான திட்டமும் உள்ளது என தலைமையாசிரியர் சாந்தி கூறுகிறார்.
அரசுப் பள்ளிகளில் எத்தகைய சாதனை யையும் நிகழ்த்த முடியும் என்பதற்கு ஆத்தனஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஓர் சிறந்த உதாரணம். அது மட்டுமல்ல; எங்கெல்லாம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் உயிர்ப்புடன் செயல்படுகிறதோ அங்கெல்லாம் அரசுப் பள்ளி சிறந்து விளங்குவது நிச்சயம். இதனை ஆத்தனஞ்சேரி அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக…
ஓய்வுபெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகிகலா மேலும் கூறியதாவது:
சாதாரண ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வி, அதுவும் ஆங்கிலவழிக் கல்வி கிடைக்கும்போது, நம் வீட்டு குழந்தைகளை அதிக பணம் செலவழித்து தனியார் பள்ளிகளுக்கு ஏன் அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் அங்குள்ள நடுத்தர மக்களிடம் உருவானது. அதன் காரணமாக இன்று எல்லா தரப்பைச் சேர்ந்த குழந்தைகளும் இங்கு பயில்கின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT