Published : 19 Mar 2014 07:14 PM
Last Updated : 19 Mar 2014 07:14 PM
'இட ஒதுக்கீட்டினை விட்டுக்கொடுத்து, தனது குடும்பத்தினருக்கு அரசியலில் இடங்களைப் பெற்றுக் கொண்டவர் கருணாநிதி' என்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து சங்கரன்கோவிலில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:
"மத்திய காங்கிரஸ் அரசால் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் ஏராளம். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் ஒன்பது ஆண்டு காலம் ஒட்டி உறவாடிய தி.மு.க. சமீபத்தில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு 98 தலைப்புகளில் வாக்குறுதிகளை அளித்துள்ளது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. பாடுபடும் என்றும் அந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
17 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. இவற்றை எல்லாம் ஏன் நிறைவேற்றவில்லை? இதற்குக் காரணம் தன்னலத்தை பற்றி சிந்தித்து; அதை நிறைவேற்றிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இருந்தது தான். உங்கள் நலத்தை மறந்துவிட்டார்.
இப்போது மீண்டும் மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதற்காக உங்களுக்கு பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். இவையெல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காகத் தான்!
அண்மையில் வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் "பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்துதல்" என்ற தலைப்பின் கீழ் "ஆண்டுகள் 17 ஆன பின்பும்; இன்று வரை பிற்படுத்தப்பட்டோருக்கான
27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படாமல்; மத்திய அரசின் ஏ பி சி டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தீர்க்க தி.மு.கழகம் மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மண்டல் கமிஷன் அறிக்கை என்பது 1993-ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரலாறு கூட தெரியாமல் 17 ஆண்டுகள் ஆன பின்பும் 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 14 விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது யார்? தி.மு.க. தானே மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது? இட ஒதுக்கீட்டை முழுமையாக ஏன் பின்பற்றவில்லை என்று மத்திய அரசை தி.மு.க. ஏன் தட்டிக் கேட்கவில்லை?
தி.மு.க-வினர் அமைச்சர்களாக இருந்த அமைச்சகங்களில் ஆவது இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டதா என்பதை கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தனது பேரனுக்கும், தி.மு.க-வினருக்கும் வளம் கொழிக்கும் இலாக்காக்களை கேட்டுப் பெற்ற கருணாநிதி; தகவல் தொழில்நுட்பத் துறையை தி.மு.க-விற்கு வற்புறுத்தி பெற்ற கருணாநிதி; தன் மகள் மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியிடம் மடிப்பிச்சை கேட்ட கருணாநிதி; பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முற்றிலும் பின்பற்றுமாறு மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை?
கருணாநிதியை பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அவருக்கு முக்கியமில்லை. தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுகிறதா என்ற அந்த இட ஒதுக்கீடு தான் அவருக்கு முக்கியம்.
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையிலிருந்து இடஒதுக்கீட்டினை கருணாநிதி காவு கொடுத்துவிட்டார் என்பது தெளிவாகிறது. திரு. கருணாநிதியை பொறுத்தவரையில் இட ஒதுக்கீடு உட்பட எந்த கொள்கையிலும் அவருக்கு அக்கறை இல்லை. தன்னலம் என்ற ஒரே கொள்கையை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் கருணாநிதி.
திமுக கூட்டணியின் சார்பில் இந்தத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி அதே கொள்கை உடையவர். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பேரவை தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இணைந்து புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டது.
போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி 30.8.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய போது "தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர் மட்டும் தான் சொந்தக்காரர் என்று சொல்லிக்கொண்ட கருணாநிதி அவர்களுடைய இரட்டை வேடம், கபட நாடகம் அனைத்தையும் தோலுரித்துக் காட்டக் கூடிய வகையில்; இனிமேல் தமிழ் என்றாலும்; தமிழர் என்றாலும்; தமிழினம் என்றாலும் அது தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான்" என்று பேசினார். அப்போது அவர் அப்படி பேசினார்.
தற்போது அவருக்கு தென்காசி தொகுதியை தி.மு.க. ஒதுக்கியுள்ளதால், இப்போது கருணாநிதியின் புகழ் பாடிக் கொண்டிருக்கிறார். யார் தனக்கு சீட் கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கம் சாயக் கூடியவர் டாக்டர் கிருஷ்ணசாமி. எனவே, தன்னலத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் வேட்பாளருக்கு வாக்களிக்காமல், தமிழகத்தின் நலனுக்காக பாடுபடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிற்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
17 ஆண்டுகளாக தன்னலத்திற்காக தமிழகத்தின் நலனை காற்றில் பறக்கவிட்ட கருணாநிதி; மீண்டும் தமிழகத்தின் நலன்களை காற்றில் பறக்கவிட உங்களிடம் வாக்கு கேட்க வருவார். ஏமாந்து விடாதீர்கள். இட ஒதுக்கீட்டினை விட்டுக்கொடுத்து; தனது குடும்பத்தினருக்கு அரசியலில் இடங்களைப் பெற்றுக் கொண்ட கருணாநிதிக்கும், தி.மு.க-விற்கும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். வருகின்ற மக்களவை பொதுத் தேர்தலில் திமுக-வை நீங்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்" என்றார் ஜெயலலிதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT