Published : 11 Feb 2017 09:07 AM
Last Updated : 11 Feb 2017 09:07 AM
ஊராட்சி அளவிலான அதிமுக கிளைச் செயலாளர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘எம்ஜிஆர், ஜெயலலிதாவின் லட்சிய கனவுகளை உயிராக காக்க உறுதி கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பிறகு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊராட்சி அளவில் ஒவ்வொரு கிளைச் செயலாளர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 27-ம் தேதி அக்கடிதங்கள் தலைமைக் கழகத்தில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கிளைச் செயலாளர்களுக்கு அந்த கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடிதத்தின் முகப்பில் ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
அந்த கடிதத்தில், ‘‘தமிழகத்தில் அதிமுக 7-வது முறையாக அரசு அமைத்துள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக அரசாட்சியை நீட்டித்து வரலாற்று பெருமிதத்தில் வாகை சூடி நிற்கிறது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டை இயலாருக்கு உதவுகின்ற இணையில்லா திருநாளாக கொண்டாடி மகிழ்வோம். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற அண்ணாவின் உயரிய வழியில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் லட்சிய கனவுகளை உயிராக காக்க உறுதி கொள்வோம்’’ என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
கட்சியில் அடிமட்ட அளவில் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத் தில் சசிகலா இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்று, அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கடிதம் கிளைச் செயலாளர்களுக்கு கிடைத்த சில நாட்களுக்குள் கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
‘‘கட்சியின் அடிமட்ட தொண்டர்களில் இருந்தே முறைப்படி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும். எனவே, சசிகலா தேர்வு செல்லாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பிரச்சினை கிளப்பி வரும் நிலையில், இதை முன்கூட்டியே கணித்து அடிமட்ட நிர்வாகிகள் வரை ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையாக இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கலாம்’’ என்கின்றனர் அதிமுகவினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT