Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM
சென்னையில் கோயம்பேடு பணிமனை முதல் கோயம்பேடு ரயில் நிலையம் வரையிலான 1.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடந்தது. முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து பிராட்வே, அண்ணா சாலை, சைதை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரையுமாக இருவழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் ரூ.14,600 கோடி செலவில் மும்முரமாக நடந்து வருகின்றன.
கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த நவம்பரில் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அங்குள்ள 800 மீட்டர் நீள ‘டெஸ்ட் டிராக்’கில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. ரயிலின் வேகம், பிரேக் சிஸ்டம், ஏ.சி.யூனிட், தானியங்கி கதவுகளின் செயல்பாடு உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன.
1.5 கி.மீ.க்கு நடந்த சோதனை
இந்நிலையில், கோயம்பேடு பணிமனை - கோயம்பேடு ரயில் நிலையம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் இருந்து 1.5 கி.மீ. தூரத்தில் அடுத்த நிலையமான கோயம்பேடு ரயில் நிலையம் உள்ளது. இதில் 1 கி.மீ. தூரத்துக்கு ‘ரேம்ப்’ எனும் சாய்தள ரயில் பாதை போடப்பட்டுள்ளது. பணிமனையில் இருந்து கோயம்பேடு ரயில் நிலையம் வரை வியாழக்கிழமை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மெட்ரோ ரயில் போக்குவரத்தில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
எல்லாமே ஆட்டோமேட்டிக் இன்னும் 2 வாரத்துக்குள் கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை 8 கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஏப்ரலில் இருந்து ஆலந்தூர் வரை சோதனை ஓட்டம் நடக்கும். சிக்னல், மெட்ரோ ரயில் இயக்கம் என அனைத்தும் ஆட்டோமேட்டிக் என்பதால் 4 மாதங்கள் வரை சோதனை ஓட்டம் நடைபெறும்.
முதல்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். சிட்கோ வரை 8 கி.மீ.க்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுவிட்டது. அசோக் நகர் வரை 6.5 கி.மீ. தூரத்துக்கு மின் பணிகளும் முடிந்துவிட்டது. உடனுக்குடன் சிக்னல் வேலை
களும் நடக்கின்றன. கத்திப்பாரா வரையிலான பணிகள் பிப்ரவரியிலும், ஆலந்தூர் வரையிலான பணிகள் ஏப்ரலிலும் முடியும். ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி செப்டம்பரில் முடியும். முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் இறுதியில் தொடங்கும்.
இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT