Published : 14 Mar 2014 01:20 PM
Last Updated : 14 Mar 2014 01:20 PM
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக தமிழகத்துக்கு 20 ஆயிரம் மத்திய பாதுகாப்புப் படையினர் வேண்டும் என்று தமிழக தேர்தல் துறை கடிதம் எழுதியுள்ளது.
கவனத்துக்குரிய தொகுதிகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை முடித்துவிட்ட தேர்தல் ஆணையம், அடுத்த கட்டமாக தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதற்காக, அனைத்து மாநிலங்களின் தேர்தல்
துறைகளிடமிருந்தும், தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்கு எத்தனை மத்திய போலீஸ் பாதுகாப்புப் படையினர் தேவைப்படுவர் என்னும் உத்தேசப் பட்டியலை அனுப்பக் கோரி தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அந்தந்த மாநிலத்தில் பதற்றமான தொகுதிகளின் பட்டியலையும் தயாரிக்கக் கேட்டிருந்தது. பதற்றமான தொகுதி என்று அழைப்பதை விடுத்து, ‘கிரிட்டிக்கல்’ (கவனத்துக்குரிய) என்று குறிப்பிடுமாறு தேர்தல் துறையினருக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தகவல் அனுப்பியிருந்தது. அது பற்றிய விவரங்களையும் கேட்டிருந்தது.
200 கம்பெனி
இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு 200 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் தேவைப்படுவார்கள் என்று மத்திய தேர்தல் அணையத்துக்கு தமிழக தேர்தல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு அதன்பின், அவர்கள் தமிழகத்துக்கு தேவையான பட்டியலை இறுதி செய்வார்கள்.
அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ்
தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகள் கவனத்துக்குரியவை என்பதற்கான பட்டியலைத் தயார் செய்யும் நோக்கில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், வியாழக்கிழமை பிற்பகல் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அந்தந்த மாவட்டங்களில் பிரச்சினைக்குரிய தொகுதிகள் பற்றிய தகவல்களை அவர்கள்பகிர்ந்து கொண்டார்கள். எந்தெந்த தொகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்பது பற்றியும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுபோன்ற கூட்டங்களில் பெறப்படும் தகவல்களை வைத்து, அதை ஆய்வு செய்து கவனத்துக்குரிய தொகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்பின், தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்புப் படையினரை கேட்டு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT