Published : 15 Jan 2014 12:48 PM
Last Updated : 15 Jan 2014 12:48 PM

தமிழர்களின் கலை, பண்பாடுஅழியாமல் காப்பாற்ற வேண்டும்- கருணாநிதி பேச்சு

தமிழர்கள் பெற்ற கலை, பண்பாடு ஆகியவற்றுக்கு அழிவு ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக கலை, இலக்கியப் பகுத் தறிவுப் பேரவை சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழர் திருவிழா மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடந்தன. இந்த நிகழ்ச்சிக்கு கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் கனிமொழி எம்.பி. ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:

இதயத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட இந்த நிகழ்ச்சியில், நாட்டுப் புறப் பாடல்களைப் பாடிய கலைஞர் களால் தரப்பட்ட ஊக்கம், உற்சா கத்தை மறந்துவிட முடியாது. இது போன்ற நிகழ்ச்சிகளை ஆண்டு தோறும் தமிழகத்தின் தெருக்களில் எல்லாம் நடத்த வேண்டும்.

தமிழர்கள் மறந்துவிட்ட இனத்தை, இன உணர்வை, நினைவுபடுத்தவும், நினைவு படுத்தினால்தான் எதிர்காலத்தை எழிலுடையதாக ஆக்க முடியும் என்பதற்காகவும் ஒரு வழக்கத்தை உரு வாக்கினோம். அவை, தமிழகத்தின் தெருக்கள்தோறும், தமிழர்களின் செவிகளிலே பழைய பாடல்களின் பெருமையும் பழைய வரலாற்று உண்மையும் பதியும் வகையில் எழுச்சியூட்டிக் கொண்டிருந்தன.

ஆனால், இடையில் ஆட்சி மாறியதால் நமது கலையை, பண்பாட்டை, நாகரிகத்தை மற்றும் விழாக்களை மறந்தோம். தைத்திங்கள் முதல் நாள்தான், தமிழரின் புத்தாண்டு. தமிழ்ப் புத்தாண்டு என்றால் பல பேருக்கு என்னவென்றே தெரியாது. அப்படிப்பட்ட இருள் கடலில் மூழ்கிக் கிடந்த தமிழனைத் தட்டி எழுப்பிய இயக்கம் திராவிடர் இயக்கம். தமிழனுடைய பண்பாடு நினைவுப்படுத்தப்பட வேண்டும், அவனுடைய பழம்பெருமை நிலை நாட்டப்பட வேண்டும். அவனுடைய வரலாற்றை தெருவெல்லாம் முழங்கவும் வீழ்ந்த வீரத்தை மீண் டும் புதுப்பிக்கவும் கலைஞர் களுடைய ஆற்றல், அறிவு, உழைப்பு அத்தனையும் பயன்பட வேண்டும்.

எந்தவொரு நாட்டிலே சரித் திரத்தை இழந்து விடுகிறானோ, அவன் வாழ்க்கையையும் மறந்து விடுகிறான். எந்த ஒரு நாட்டிலே வரலாற்றைப் புரிந்து கொள்ளா மல் இருக்கிறானோ, அவன் வர லாற்றை என்றைக்குமே புரியாதவ னாக ஆகிவிடுகிறான். ஆகவே தான், வரலாற்றுக் கணக்கின்படி, சரித்திரச் சான்றுகளின்படி நாம் பெற்றிருந்த கலை, பண்பாடு, இவற்றுக்கெல்லாம் சிறிதளவு அழிவும் ஏற்படாமல் அவற்றைக் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x