Published : 09 Oct 2014 12:31 PM
Last Updated : 09 Oct 2014 12:31 PM
திருப்பூர் அருகே சேமலைக் கவுண்டம்பாளையத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்திக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மாட்டு மந்தையைக் காக்க புலியுடன் போராடி உயிரிழந்த கணவனின் நினைவாக அவரது மனைவி வடித்த அரிய புலிக்குத்திக்கல் என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள்.
திருப்பூரில் இருக்கும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் கொங்கு பகுதியில் கல்வெட்டுக்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறது. தற்போது அந்த மையம் திருப்பூர் அருகே சேமலைக் கவுண்டம்பாளையத் தின் வலுப்பூர் அம்மன் கோயிலில் ஒரு புலிக்குத்திக்கல்லை கண்டு பிடித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
வலுப்பூர் அம்மன் கோயில் வரலாற்றுப் புகழ் பெற்றது. கி.பி. 973 - 985-ம் ஆண்டு காலகட்டத்தில் மன்னராக இருந்த விக்கிரமசோழன் மகள் மைக்குழலாளுக்கு வலிப்பு நோய் வந்தபோது வலுப்பூர் அம்மன் கோயிலில் வைத்துதான் குணப்படுத்தினார்கள். இங்குள்ள பிள்ளையார் சன்னதி அருகே நடுக்கல் போன்ற தோற்றமுடைய ஒரு கல்லை மக்கள் வழிபடுவ தாக தகவல் கிடைத்தது. தொல்லி யல் அறிஞரான பூங்குன்றனுடன் அங்குச் சென்றோம். உள்ளூர் மக்கள் இதனை ‘பீலிக்கல்’ என்கின்றனர். கொங்கு நாட்டில் பல ஊர்களில் நரிக்கல், புலிக்கல், மந்திரக்கல் என்ற பெயரில் கற்கள் நடப்பட்டு இருக்கின்றன. அவை நோயை குணப்படுத்தும் என்று நம்பிக்கையுடன் மக்கள் வழிபடுகின்றனர்.
சங்கக் கால தமிழ் சமூகத்தில் பசு மாடுகள் பெரும் செல்வத்தை அளிப்பவையாக இருந்தன. அதனால், அவற்றுக்காக ஊர் களுக்கு இடையே சண்டை நடக்கும். அவற்றை பிற விலங்குகளிடம் பாதுகாப்பதிலும் மக்கள் பெரும் கவனம் செலுத்தினர். இதுபோன்ற சம்பவங்களில் உயிர் இழப்பவர் களுக்கு நடுக்கற்களை நட்டு மரியாதை செய்வது வழக்கம்.
தற்போது கண்டெடுக்கப்பட்ட நடுக்கல், புலிக்குத்திக் கல்லாகும். இது 2.6 அடி அகலமும், 4.6 அடி உயரமும் கொண்டது. இதில் ஏழு வரிகளில் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கூடவே, ஒரு வீரனின் தலை வலதுபுறம் சாய்த்த நிலையில் உள்ளது. வீரனின் வலது கையில் உள்ள வாள், புலியைக் குத்துகிறது. இடது கை பாயும் புலியை தடுக்கிறது. புலியின் முன்னங்கால் இரண்டும் வீரனின் இடுப்புப் பகுதியிலும், பின்னங்கால் இரண்டும் வீரனின் இடதுகால் மேல் அழுத்திய நிலையிலும் உள்ளன. புலியின் வால் அதன் இரண்டு கால்களுக்குகிடையே மடிந்த நிலையில் உள்ளது.
கொங்கு பகுதியில் நூற்றுக் கணக்கான புலிக்குத்திக்கல் உள்ளிட்ட நடுக்கற்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் விஜய நகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. சில புலிக்குத்திக் கற்கள் மட்டும் வட்டெழுத்துக்களுடன் காணப்படு கின்றன. அந்த வகையில் இது தனி சிறப்பு பெறுகிறது. ஊர் மக்கள் மற்றும் அரசு நிர்வாகங்கள் மட்டுமே நடுக்கற்களை நட்டுக்கொண்டிருந்த நிலையில் ஒரு மனைவி தனது கணவனுக்காக புலிக்குத்திக்கல் நட்டதிலும் இந்தக் கல் தனிச் சிறப்பைப் பெறுகிறது.” என் றார்.
இதன் வட்டெழுத்துக்களை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் பூங்குன்றனிடம் கேட்டபோது “அந்த வீரனின் பெயர் வானவனாக இருக்கலாம். அவனது மனைவி அந்த ஊர்த் தலைவரின் மகள். வானவன் புலியுடன் சண்டையிட்டு அதனைக் கொன்று மாட்டு மந்தையை காப்பாற்றுகிறான். கணவனின் நினைவாக அவன் மனைவி இந்த புலிக்குத்தி கல்லை நட்டிருக்கிறார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT