Published : 16 Jan 2014 12:01 PM
Last Updated : 16 Jan 2014 12:01 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்தன காளைகள்- 13 காளைகளை அடக்கிய வீரருக்கு மோட்டார் சைக்கிள் பரிசு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்து வந்த 500-க்கும் மேற்பட்ட காளைகளை சிங்கம் போல் சீறிப் பாய்ந்து காளையர்கள் அடக்கினர்.

அலங்காநல்லூரில் வியாழக்கிழமை உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 595 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

அதுபோல, காளைகளுடன் விளையாடுவதற்காக 516 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் 7 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. அதுபோல, பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 32 பேர் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியது. களத்தில் இருந்த வீரர்களுக்கு முதல்வர் படம் பொறித்த பனியன்கள் வழங்கப்பட்டன. அதை அணிந்துகொண்டு வீரர்கள் களத்தில் இறங்கினர். முதலில் கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

காளைகளும் காளையரும்

காளையின் உரிமையாளர் மற்றும் ஊரை முதலில் அறிவித்த விழா கமிட்டியாளர்கள் காளையின் தரத்தை வைத்து தங்கக்காசு, பீரோ, பிரிஜ், சைக்கிள், கைக்கடிகாரம், பாத்திரம், பேக் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அறிவித்தனர். மேலும், சிறந்த வீரருக்கு மோட்டார் சைக்கிள்கள் காத்திருக்கு. நின்று விளையாடும் சிறந்த காளைக்கும் இரண்டு சக்கர வாகனம் உண்டு என்பதை விழா கமிட்டியாளர்கள் அடிக்கடி அறிவித்து களத்தில் இருந்த வீரர்களை உசுப்பேற்றினர். நின்று விளையாடும் காளைகளுக்கும், இளைஞருக்கும் சைக்கிள் வழங்கப்படும் என்று அவ்வப்போது அறிவித்தனர்.

களத்தில் இருந்த இளைஞர்கள் அறிவிப்பைக் கேட்டதும் பரிசுப் பொருட்களை அள்ளிச் செல்வதற்காக வாடிவாசலிலேயே காத்திருந்தனர். பின்னர் வெளியே வந்த காளைக்கு இணையாக இளைஞர்களும் காளைபோல மோதினர். காளையை இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வீரர்கள் பிடித்தபோது, ஒரு ஆள் மட்டும் காளையைப் பிடி, அடுத்த ஆள் அடுத்த காளையைப் பிடித்து பரிசு வாங்கலாம் என அறிவித்து இளைஞர்களை ஊக்கப்படுத்தினர். சில நேரங்களில் இளைஞர்கள் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளிச் சென்றனர். காளைகள் வெற்றி பெற்ற நிலையில், அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் பங்கேற்ற வீரர்களில் 49 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறிய காயம் அடைந்த வீரர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களுக்கு வசதியாக ஆங்காங்கே எல்.சி.டி. டி.வி. திரைகள் வைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

13 காளைகளை அடக்கிய வீரர்

சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியில், சிறந்த வீரராக மதுரை காவல்துறையில் பணிபுரிந்து வரும் வினோத்ராஜ் என்பவர் 13 பரிசுகள் பெற்று இருசக்கர வாகனத்தை பெற்றார். அவருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன் சாவியை வழங்கினார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மதியம் 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 36 மாடுகள் களம் இறக்கப்படவில்லை. செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலரி போட்டியின் நடுவே திடீரென லேசாக சரிந்தது. இதில் யாருக்கும் காயமில்லை.

விழாவில், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா, மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் கிரண்குராலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x