Published : 23 Jan 2014 09:06 PM
Last Updated : 23 Jan 2014 09:06 PM

கச்சத் தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கச்சத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதன் காரணமாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை கடற்படையின் தாக்குதல்களிலில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாத்திடும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் எல்.டி.ஏ. பீட்டர் ராயன் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடல் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கும் அவரவர் நாட்டு எல்லைப் பகுதிகளில் உள்ள முழு இறையாண்மையை அந்த ஒப்பந்தங்கள் உறுதி செய்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் எல்லைப் பிரச்சினையும், கச்சத் தீவு யாருக்கு சொந்தம் என்பதும் ஏற்கெனவே முடிந்து போன பிரச்சினை.

கச்சத் தீவுப் பகுதியைப் பொறுத்தமட்டில் இந்திய மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் அங்கு செல்லலாம். அங்குள்ள அந்தோணியார் கோயிலுக்குச் சென்று வழிபடும் உரிமை நம் மீனவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை.

இந்தச் சூழலில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதன் காரணமாகவே இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

நம் மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையாதபடி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும், இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அந்த பதில் மனுவில் மத்திய அரசு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x