Published : 13 Jul 2015 11:35 AM
Last Updated : 13 Jul 2015 11:35 AM

முதல்வர் ஜெயலலிதா நலமே: அதிமுகவினர் போஸ்டர் பதில்

முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வருவது வழக்கமான விஷயம்தான் என்றாலும், அவர் இன்று (திங்கள்கிழமை) தலைமைச் செயலகத்துக்கு வரவுள்ளதையொட்டி போஸ்டர்களும், பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கும், எதிர்க்கட்சியினரின் வசை மொழிக்கும் பதிலளிக்கும் வகையிலேயே இத்தகைய 'போஸ்டர்' மூலம் பதிலளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் சலசலக்கப்படுகிறது.

அண்மைகாலமாகவே முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என சமூக வலைத்தளங்களில் பரவலாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் முதல்வரின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு பொதுவெளியிலும், எதிர்க்கட்சியினராலும் முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகிவந்ததால், தமிழக முதல்வர் இன்று தலைமைச் செயலகம் செல்கிறார். இதனையொட்டி முதல்வர் செல்லும் வழி நெடுகிலும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

வதந்தி ஏன்?

அதிமுக சார்பில் ஜூலை 1-ம் தேதி, சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இஃப்தார் நோன்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. முதல்வர் அனுப்பிய செய்தியில் உடல்நிலை சரியில்லை என்பதை குறிப்பிட்டிருந்தார்.

ஜூலை 4-ம் தேதி தலைமைச் செயலகம் வந்த முதல்வர், ஆர்.கே.நகர் எம்எல்ஏ-வாக பதவியேற்றார். அன்று பகலில் செல்வதாக இருந்த கொடநாடு பயணம் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வரவில்லை. இதன் காரணமாக முதல்வரின் உடல்நிலை குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வாயடைக்குமா?

இந்நிலையில் இன்று பிற்பகல் முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்துக்கு செல்வதால் அவரின் உடல்நிலை குறித்தான ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x