Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM
நாங்கள் ஜெயிக்கிறோமோ இல்லையோ வெற்றி வேட்பாளரை தீர்மானிப்பது நாங்கள்தான் என்று உறுதிபடக் கூறுகின்றனர் நீலகிரி காங்கிரஸார்.
நீலகிரியை பொறுத்தவரை மலைப்பகுதியில் குன்னூர், கூடலூர், ஊட்டி சட்டமன்றத் தொகுதிகளும் மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகிய தொகுதிகள் சமவெளியிலும் உள்ளன. இங்கே காங்கிரஸ் 10 முறை வென்றுள்ளது. அக்கட்சியின் ஆர்.பிரபு மட்டும் 1980, 1984, 1989, 1991, 2004 தேர்தல்களில் வென்றுள்ளார். கடந்த தேர்தலில் நீலகிரி தனி தொகுதி ஆனதால் பிரபு கோவைக்கு மாறிவிட, நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்தது காங்கிரஸ்.
1996-ல் காங்கிரஸிலிருந்து தமாகா பிரிந்து காங்கிரஸ் படுதோல்வி கண்டபோதுகூட நீலகிரியில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் பிரபு. அந்த பலம்தான், ஜெயிக்கப் போகிறவரை தீர்மானிப்பது நாங்கள்தான் என மார்தட்டுகிறது நீலகிரி காங்கிரஸ்.
அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் கூறும் போது, “திமுக வேட்பாளர் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறைக்குச் சென்றவர். திரும்பவும் அவர் அங்கேதான் போகப்போகிறார். எனவே அவருக்கு போடுகிற ஓட்டு முழுவதும் வீண்’’ என்றார். இந்நிலையில், தான் எந்த ஊழலும் செய்யவில்லை என தன்னிலை விளக்கம் கொடுத்து வாக்குச் சேகரிக்கிறார் ஆ.ராசா.
யார் ஜெயித்தால் நமக்கென்ன.. நம்மால் ஜெயிக்க முடியாது என்ற மனநிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினரோ, “ஜெயிக்கப்போவது யாருன்னு நாங்கதான் தீர்மானிப்போம்’’ என பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளர் கோவை தங்கம்தான் இந்தமுறை நீலகிரி காங்கிரஸ் வேட்பாளராம்.
காங்கிரஸ் மற்றும் அதிமுக பிரச்சாரம் குறித்து திமுக-வின் முன்னாள் சட்டமன்ற கொறடா முபாரக்கிடம் கேட்டபோது, “குன்னூர் சேர்மனாக இருந்த அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களில் ஒரு இடத்தில்கூட காங்கிரஸாரால் பதவிக்கு வரமுடியவில்லை. இனியும் காங்கிரஸோடு இருந்தால் உள்ளதும் போய்விடும் என்பதால் நாங்களே காங்கிரஸை ஒதுக்கி வைத்துவிட்ட பிறகு, எங்களது வெற்றியைத் தீர்மானிக்க அவர்கள் யார்?’’ என்று கேட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT