Published : 12 Oct 2014 11:06 AM
Last Updated : 12 Oct 2014 11:06 AM

தகவல் அளிப்பதில் உதாசீனம்?- இன்று தகவல் பெறும் உரிமை சட்டம் உதயமான நாள்

தகவல் பெறும் உரிமை சட்டம் கடந்த 12.10.2005-ல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. ஸ்பெயின் நாட்டில்தான் முதன் முதலில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

உலக அளவில் 73 நாடுகளில் தகவல் பெறும் உரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டம் மூலம் சமூக நலத்திட்டங்கள், பொது நிர்வாகம் குறித்த எந்த விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். அரசு அலுவலகங்களில் ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான செயல்பாட்டை வளர்ப்பது, அரசு அலுவலர்கள் அனைவரும் மக்களுக்கு பதில் அளிக்க பொறுப்புள்ளவர்கள் என உணர செய்வது, லஞ்சத்தை ஒழிப்பது உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் இச்சட்டத்தில் உண்டு.

குடிமக்கள் கேட்கும் தகவல்களை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மறுப்போ அல்லது தவறான தகவலோ கிடைக்க பெற்றால் மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீட்டை 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மெத்தனம்

அதிலும் தகவல் கிடைக்காவிட்டால் 2-வது மேல் முறையீட்டை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதே நேரத்தில் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழலும் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வருவதால் தகவல் கொடுக்க வேண்டிய அலுவலர்கள் இதில் மெத்தனம் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனுக்கள் நிலுவை

கிரியேட் அமைப்பைச் சேர்ந்த பொன்னம்பலம் கூறும்போது, தகவல் ஆணையர் அலுவலகத்திலேயே ஆயிரக்கணக்கான மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. தகவல் ஆணையர்களும் அரசு சார்பு உடையவர்களாகவே இருந்து வருகின்றனர். தகவல் பெறும் உரிமை சட்டத்தை தன்னிச்சையான நீதித்துறையின்கீழ் வரும் அமைப்பாக்க வேண்டும். அதேபோல் நடைமுறையில் 30 நாட்களுக்குள் தகவல்கள் தரப்படுவதில்லை. அப்படியே தந்தாலும் சம்பந்தமில்லாத பதிலை கூறுவது வாடிக்கையாகி விட்டது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தற்போதும் “டாண்டகாம்” முறையில்தான் (கோப்புகளை பராமரிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் டாண்டகாம் என்ற வெள்ளையர். எனவே இந்த பராமரிப்பு முறைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.) கோப்புகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த முறையை சரியாக பின்பற்றி, கணினியையும் முழுமையாக பயன்படுத்தினால் மட்டுமே தகவல் பெறும் உரிமை சட்டம் சராசரி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

கூடுதல் பணிச்சுமை

நாகர்கோவிலை அடுத்த காடேற்றியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாஸ்கர் கூறும்போது, இச்சட்டத்தில் எப்படி தகவலை பெறுபவருக்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் உள்ளதோ, அதேபோல் தகவலை கொடுக்காமல் மறுப்பதற்கும் அதிகாரிகளுக்கு ஏராளமான வழிகள் உள்ளன. அண்மையில் காவல்துறை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் ஒரு கேள்வி கேட்டதால் என் வீட்டுக்கே போலீஸார் தேடி வந்து விட்டனர். அரசு அதிகாரிகள் இச்சட்டத்தை கூடுதல் பணிச் சுமையாகவே கருதுகின்றனர். இந்நிலை மாற வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x