Published : 29 Jun 2017 02:21 PM
Last Updated : 29 Jun 2017 02:21 PM
அதிமுக எம்எல்ஏக்கள் பேர விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தொடர்ந்த கூடுதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் கடந்த பிப்.18-ல் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த பிரதான வழக்கின் விசாரணை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க குதிரை பேரம் நடந்ததாக தனியார் டிவி ஒன்று அதிமுக எம்எல்ஏ ஒருவரது பேட்டியை ஒளிபரப்பியது.
இதுதொடர்பாக சிபிஐ, வருவாய் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரகம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு உயர் நீதி மன்றத்தில் ஸ்டாலின் கூடுதல் மனு தாக்கல் செய்தார்.
'நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது பேரவையின் உரிமைப் பிரச்சினை. எனவே, அதுகுறித்து விசாரிக்க சிபிஐ, வருவாய் புலனாய்வுத் துறைக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என முதல்வர் பழனிசாமி, சட்டப் பேரவைச் செயலாளர் பூபதி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் சிபிஐ, வருவாய் குற்றப்புலனாய்வுத் துறையை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
இதுதொடர்பாக வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பவானி சுப்ராயன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ''உங்களின் பிரதான மனுவில் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்றும் மறைமுக வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் அறிவிக்கக் கோரி உள்ளீர்கள்.
கூடுதல் மனுவில் குதிரை பேர விவகாரம் குறித்து சிபிஐ, வருவாய் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரகம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள்.
ஒரே வழக்கில் வெவ்வேறு கோரிக்கைகளை கேட்க முடியாது. இதற்கு தகுந்த அமைப்பிடம் சென்று பரிகாரம் தேடிக்கொள்ளலாம். இதனால் கூடுதலாகத் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்'' என்று கூறி உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT