Published : 30 Jul 2016 02:26 PM
Last Updated : 30 Jul 2016 02:26 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வகையில், நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகளே உற்பத்தி செய்து, தங்கள் வயல்களில் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் ரசாயன பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது.
பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் உபயோகிப்பதால் நீர், மண், காற்று ஆகியவை மாசுபடுகின்றன. விளைபொருட்களும் நச்சுத்தன்மை கொண்டதாகவும், உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் மாறுகின்றன. எனவே, ரசாயன பூச்சிக் கொல்லி உபயோகத்தை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரி கட்டுப்பாட்டு முறை
உயிரிக் கட்டுப்பாட்டு முறை என்பது இயற்கை காரணிகளான நன்மை பயக்கும் இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள், நூற்புழுக்கள் மற்றும் வைரஸ் நச்சுயிர்கள் மூலமாக, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் முறையாகும். இந்த நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகளே தங்கள் தோட்டங்களில் உற்பத்தி செய்து பயன்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
16 உற்பத்தி மையங்கள்
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பா.வன்னியராஜன் கூறியதாவது:
`மாவட்டத்தில் 16 கிராமங்களில் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி மையங்களை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மையங்கள் விவசாயிகள் ஆர்வலர் குழு மூலம் நடத்தப்படுகிறது. மையங்களை அமைக்க மொத்தம் ரூ.1,07,500 மானிய உதவி அரசால் வழங்கப்படுகிறது’ என்றார் அவர்.
விவசாயிகளே தயாரிப்பு
உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி மையம் தொடர்பாக ஹைதராபாத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற கோவில்பட்டி வேளாண் அலுவலர் கா.ஹரிபுத்திரன் கூறியதாவது:
`டிரைகோகிரம்மா’ என்ற குழவி பூச்சியின் முட்டை ஒட்டுண்ணி அட்டை, `டிரைகோடெர்மா’ விர்டி என்ற பூஞ்சை, பழப்பூச்சி இனக்கவர்ச்சி பொறி ஆகிய உயிரி கட்டுப்பாட்டு காரணிகளை விவசாயிகளே உற்பத்தி செய்கின்றனர். இவற்றுக்கான தாய் வித்து ஹைதராபாத்தில் உள்ள தேசிய பயிர்நல மேலாண்மை நிலையத்தில் இருந்து வாங்கி வரப்படுகிறது.
குழவிப் பூச்சி
`டிரைகோகிரம்மா’ என்ற குழவி பூச்சியின் முட்டையை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்து, அதனை சிறு சிறு அட்டைகளில் ஒட்டி, அந்த அட்டைகளை பயிர்களின் இலைகளில் ஒட்டி வைத்துவிடுகின்றனர். அந்த முட்டைகளில் இருந்து 6 நாட்களில் குழவிப் பூச்சிகள் வெளியாகும். இந்த குழவிப் பூச்சியானது பயிர்களை தாக்கும் புழுக்களின் முட்டைகளை அழித்துவிடும்.
இதுபோல் `டிரைகோடெர்மா விர்டி’யை அதிகளவில் உற்பத்தி செய்து, விதைநேர்த்தி முறையில் விதையுடன் கலந்து பயன்படுத்தலாம். இது, மண் மூலம் பரவக்கூடிய வேர் அழுகல் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும்.
அதுபோல் பழப்பூச்சி இனக்கவர்ச்சி பொறியை அனைத்து வகை பழ மரங்களுக்கும் பயன்படுத்தலாம். ஹெக்டேருக்கு 8 முதல் 10 பொறிகளை வைத்தால் அனைத்து வகை பழப்பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.
குறைந்த விலை
குழவி பூச்சியின் முட்டை ஒட்டுண்ணி அட்டை ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு அட்டையில் 15 ஆயிரம் முட்டைகள் இருக்கும். ஏக்கருக்கு 4 அட்டைகள் தேவை. இதுபோல் டிரைகோடெர்மா விர்டி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹெக்டேருக்கு 10 கிலோ போதும். பழப்பூச்சி இனக்கவர்ச்சி பொறி ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார் அவர்.
செலவு மிச்சம்
கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டியில் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி மையத்தை நடத்தி வரும் விவசாயிகள் ஆர்வலர் குழுவை சேர்ந்த ஏ.மாரிமுத்து கூறியதாவது:
நாங்கள் உற்பத்தி செய்யும் உயிரி கட்டுப்பாட்டு காரணிகளை எங்கள் வயல்களில் பயன்படுத்துகிறோம். சுற்றுவட்டார விவசாயிகளுக்கும் வழங்குகிறோம். முன்பு ரசாயன பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.4ஆயிரம் வரை செலவு செய்வோம். தற்போது அந்த செலவு மிச்சமாகியுள்ளது. நோய் தாக்குதல் வெகுவாக குறைந்துள்ளது என்றார் அவர்.
90 சதவீதம் கட்டுப்படுத்தும்!
வேளாண்மை உதவி இயக்குநர் கி.பாலசிங் கூறியதாவது:
`உயிரி கட்டுப்பாட்டு காரணிகளை அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்த முடியும். பூச்சிகளால் ஏற்படும் நோய்களை இந்த காரணிகள் 90 சதவீதம் கட்டுப்படுத்துகிறது. உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் குறைந்த விலையில் வழங்கப்படுவதால், விவசாயிகளுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துக்கான செலவு பெருமளவில் குறைகிறது’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT