Published : 06 Feb 2014 01:43 PM
Last Updated : 06 Feb 2014 01:43 PM

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் அரியவகை டால்பின்கள்: சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கவலை

ஒரே வாரத்தில் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இறந்த நிலையில் இரண்டு டால்பின்கள் கரைஒதுங்கிய சம்பவம் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில், அரியவகை கடல் வாழ் உயிரினங்களான டால்பின், கடல் பசு, திமிங்கிலங்கள் வாழ்கின்றன. இந்த அரியவகை உயிரினங்கள் கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ன மாற்றங்கள் மற்றும் விபத்துகள் மூலமாக மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 01 மற்றும் பிப்ரவரி 05 என பிப்ரவரி முதல் வாரத்தில் மட்டும் இரண்டு டால்பின்கள் ராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இறந்தநிலையில் கரை ஒதுங்கின.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய சுற்றுசூழல் ஆய்வாளர் ஜெயகாந்தன் ''அழிந்து வரும் அரிய வகை உயரினமாக டால்பின் உள்ளதால் இந்திய அரசு 2009 அக்டோபர் மாதம் இந்தியாவின் தேசிய கடல்நீர் விலங்காக டால்பின்களை அறிவித்தது. மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் டால்பின் மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

பாரம்பரிய மீன்பிடி முறையை மறந்து நாம் ஆழ்கடல் மீன்பிடி முறைகளுக்கு புகுந்து விட்டோம். இதனால் ஆழ்கடலில் வாழும் டால்பின்கள் கரையை நோக்கி வரத்துவங்கி விட்டன. இதனால் விசைப்படகுகளில் மற்றும் பாறைகளில் மோதி, வலைகளில் பட்டு அதிகம் இறந்து விடுகின்றன.

அரியவகை உயிரினமான டால்பின் பற்றிய விழிப்புணர்வை கடலோரப் பகுதி மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு பாடதிட்டகளில் சுற்றுச்சூழல் கல்வியில் அரிய வகை உயிரினங்களைப் பற்றிய போதிக்கப்படவும் வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x