Published : 16 Sep 2016 12:51 PM
Last Updated : 16 Sep 2016 12:51 PM

பலவீனமான பகுதியில் எதிர்க்கட்சியினருக்கு வலை: உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து அதிமுக புதிய தேர்தல் வியூகம்

உள்ளாட்சி தேர்லை குறி வைத்து பலவீனமாக இருக்கும் பகுதியில் எதிர்கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அதிமுகவினர் இழுத்து வருவதால் எதிர்கட்சியினர் நிர்வாகிகளை தக்க வைக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100-க்கு 100 இடங்களையும் கைப்பற்றி திட்டமிட்டு தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது. அதிமுக கவுன்சிலர்கள் மீது மக்க ளுக்கு இருக்கும் அதிருப்தியை முன்நிறுத்தி பிரச்சாரம் செய்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக் கையுடன் திமுகவும் அதிமுக வுக்கு போட்டியாக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

தேமுதிக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தயாராகி வந்தாலும் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வமில்லாமல் உள்ளனர். காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் திமுக கூட்டணியை எதிர்பார்த்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்க முடியாமல் காத்திருக்கின்றனர். பாமக, பாஜக, மதிமுக கட்சிகள் வாக்கு வங்கி வலுவான பகுதியில் களமிறங்க உள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு களில் அதிமுக கவுன்சிலர்களில் 70 சதவீதம் பேர் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என உளவுத் துறை அதிமுக தலைமைக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அதிமுக பலவீனமான பகுதியில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய கிளைச் செயலர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை இழுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று விருதுநகர், திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் மகன் அதிமுகவில் சேர்ந்துள்ளார். அதுபோல், மதுரை 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜீவாநந்தம் அதிமுகவில் சேர்ந்துள்ளார். இவர் திமுகவில் பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் அப்பகுதியில் செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார். நாகம லைப்புதுக்கோட்டை திமுக பஞ்சா யத்து தலைவர் ஜெயகுமாரும் நேற்று அதிமுகவில் சேர்ந்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டச் செயலர் ராமமூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலர் கார்த்திகேயன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலர் ராமையா, மத்திய 3-ம் பகுதி திமுக இளைஞர் அணி செயலர் ராம்குமார் உள்பட புறநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் 2,500 பேர் அதிமுகவில் சேர்ந்தனர்.

இதற்காக மதுரை புறநகர் அதிமுக மாவட்டச் செயலர் வி.வி.ராஜன் செல்லப்பா முன்னின்று ஏற்பாடுகள் செய்தார். இவருக்கு போட்டியாக மாநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜு மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும், திமுக, காங்கிரஸ், தேமுதிகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை இழுக்க முயற்சி மேற்கொண் டுள்ளதாக கூறப்படுகிறது.

பலவீனமான வார்டுகளில் எதிர்க்கட்சிகளில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிட வேட்பாளராக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளதால் எதிர்க்கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் மாற்று கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களை இழுப்பதால் தங்க ளுக்கான மரியாதை, அதிகாரம், செல்வாக்கு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் அதிமுக வினரும் கலக்கம் அடைந்துள்ளனர். திமுக, அதிமுகவின் போட்டி தேர்தல் வியூகத்தால் உள்ளாட்சி தேர்தல் களம் மதுரையில் விறுவிறுப்படைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x