Published : 23 Oct 2013 09:26 AM
Last Updated : 23 Oct 2013 09:26 AM
நாட்டின் 20-வது அணு உலையிலிருந்து மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டிலுள்ள அணுமின் நிலையங்கள் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டன. அவற்றிலிருந்து மிக அதிக அளவாக 5,40,720 மெகாவாட் வரைதான் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால் கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் ஆயிரம் மெகாவாட் வரை உற்பத்தி செய்யும் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது அணு உலை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் போடப்பட்டது முதலே அதற்கான எதிர்ப்பும் ஒரு பக்கம் இருந்துவந்தாலும் நீண்ட நெடிய பயணத்துக்குப் பிறகு உற்பத்தியை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
1998: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ரஷ்ய அதிபர் கார்பசேவ் ஆகியோர், 1988-ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய- ரஷ்ய கூட்டு முயற்சியில், ரூ.13,500 கோடியில் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் தொடங்கப்பட்டது.
2001: தலா, 1,000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரு அணுஉலைகளை அமைக்கும் இத் திட்டப்பணிகள், 2001-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கின.
2002: அணு உலைகள் கட்டுமானப் பணிகள் 2002-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி மேற்கொள்ளப்பட்டன.
2007: முதல் அணு உலையிலிருந்து 2007-ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாம் அணு உலையிலிருந்து 2008-ம் ஆண்டு டிசம்பரிலும் மின் உற்பத்தி தொடங்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் கட்டமைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு, மின் உற்பத்தியைத் தொடங்க முடியவில்லை.
2011: பணிகள் ஏதும் நடைபெறாமல் முடங்கியிருந்த அணு உலையில், கடந்த 2011-ம் ஆண்டு இறுதிகட்ட பணிகள் தொடங்கியபோது, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு தொடக்கப்பட்டு, போராட்டம் வலுப்படுத்தப்பட்டது. பணிகளில் தொய்வு தொடர்ந்தது.
2012 மார்ச்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகளைத் தொடங்க ஆதரவு தெரிவித்து, 2012-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் முழுவீச்சில் பணிகள் தொடங்கின.
2012 மே: அணு உலையில் வெப்ப சோதனை ஓட்டம் நடத்துவதற்காக முதலாவது அணு உலையில் நிரப்பப்பட்ட மாதிரி எரிபொருளை அகற்ற, கடந்த ஆண்டு மே 10-ம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது.
2012 ஜூன்: இப்பணிகள் மே 25-ம் தேதி தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை நடைபெற்றது.
2012 ஆகஸ்ட்: தொடர்ந்து முதலாவது அணு உலையில் 163 செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் பொருத்தும் பணி ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்றது.
2013: அணுஉலை எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து மத்திய அரசு சார்பில் ஏ.இ.முத்துநாயகம் தலைமையில் ஒரு குழுவும், மாநில அரசு சார்பில் பேராசிரியர் இனியன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கைகள் கூடங்குளத்தில் அணுஉலையை தொடங்க சாதகமாக இருந்தன.
2013 மே: இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் இருந்ததால் மின் உற்பத்தி தாமதமாகி வந்தது. கடந்த மே 6-ம் தேதி கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியது.
2013 ஜூலை: தொடர்ந்து கூடங்குளத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொண்ட அணுசக்தி ஒழுங்கமைப்பு, கூடங்குளத்தின் முதல் அணு உலையில் அணு பிளவுக்கு உட்படுத்தவும், மின் உற்பத்தியைத் தொடங்கவும் ஜூலை மாதம் அனுமதி வழங்கியது. ஜூலை 11-ம் தேதி மின் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. முதலாவது அணு உலை மின் உற்பத்திக்கான நிலையை எட்டுவதற்கான இறுதிகட்ட பணிகளும் நிறைவுற்றன. அதற்கான ஒப்புதலை அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்திடமிருந்து பெறுவதற்கும் கடந்த சில மாதங்களாயிருந்தன.
2013 அக்டோபர் 22: வாரியத்தின் அனுமதியுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT