Last Updated : 28 Mar, 2014 12:00 AM

 

Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM

மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாய் கணித்த எம்.ஜி.ஆர்.: மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணனின் மலரும் நினைவுகள் தொடர்ச்சி..

மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாகக் கணிப்பதில் எம்.ஜி.ஆரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை.

1977 சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் அழகுதிருநாவுக்கரசை ஆதரித்துப் பேசுவதற்காக எம்.ஜி.ஆர். வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இரவு 8 மணி பொதுக்கூட்டத்துக்கு போகவேண்டும். ஆனால், எம்.ஜி.ஆரால் அதிகாலை 2.30 மணிக்குத்தான் அங்கு போகமுடிந்தது.

வழிநெடுகிலும் மக்கள் கூட்டத்தால் நாங்கள் வந்த பிரச்சார வேன் நத்தை போலத்தான் ஊர்ந்து சென்றது. மன்னார்குடி போனதும் சவுரி அய்யங்கார் வீட்டில் சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் எம்.ஜி.ஆர். அவரைப் பார்த்ததும் எழுந்த ஆரவாரத்தை சொல்ல வார்த்தையே இல்லை. நாலாபக்கமும் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. மக்களைப் பார்த்து இரு கைகூப்பி வணக்கம் செலுத்திய எம்.ஜி.ஆர்., ஒன்றேகால் மணி நேரம் பேசினார். பேசிமுடிக்கும் வரை கரவொலிக்கும் பஞ்சமே இல்லை.

கூட்டம் முடிந்து பிரச்சார வேனுக்கு வந்த எம்.ஜி.ஆரிடம் ‘அண்ணே நமக்குத்தான் நிச்சயம் வெற்றி’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினோம். நாங்கள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட தலைவர், ’இந்தத் தொகுதியில் நம்ம கட்சி ஜெயிக்காது’என்று குண்டைத் தூக்கிப் போட்டார். இந்தப் பதிலை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘ஏன் அப்படி கூறுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, ‘இந்தக் கூட்டம் சினிமா போல என்னைப் பார்க்க வந்த கூட்டம். இவர்கள் ஓட்டெல்லாம் நமக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இத் தொகுதியில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அம்பிகாபதிதான் வெற்றிக்கனியைப் பறிப்பார்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் எம்.ஜி.ஆர். அது போலவே அம்பிகாபதிதான் வென்றார்.

திறந்த வேனில் பிரச்சாரம் செய்யும்போது கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் கொட்டும் மழையாய் இருந்தாலும் குடை பிடிக்க அனுமதிக்கவே மாட்டார் எம்.ஜி.ஆர். ’நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகுபார்த்த மக்களே மழையில் நனைந்து வெயிலில் காயும்போது எனக்கு மட்டும் குடை எதற்கு?’ என்பார். ஒருமுறை திருத்துறைப்பூண்டி பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு சந்துக்குள் இருந்து வேகமாக ஓடிவந்த 10 வயது சிறுவன் எம்.ஜி.ஆர். கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ’எங்கள் கிராமத்தில் கொடியேற்ற வாங்க தெய்வமே’ என்றான். அவனது அன்பில் நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்., 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கொடியேற்றி னார்.

அந்த கிராமத்தினர் எம்.ஜி.ஆருக்கு வாழைப்பழம், சாக்லேட் எல்லாம் கொடுத்து மகிழ்ந்தனர். பரவாயில்லை என்று மறுத்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவர்கள் என்னிடம் கொடுத்தனர். பிரச்சார வேனுக்கு வந்ததும், ‘மாணிக்கம், (எம்.ஜி.ஆருக்கு உணவு பரிமாறுபவர்) ஏதாவது சாப்பிடக் கொடு’ என்றார். அப்போது அந்தக் கிராமத்தினர் கொடுத்த வாழைப்பழத்தைக் கொடுத்தேன். ’அந்த மக்கள் அன்பாகக் கொடுத்தது தேவாமிர்தம் மாதிரியப்பா’ என்றார் புன்முறுவலுடன்.

மக்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம் உண்மையானது. அவர் சாமானிய மக்களில் ஒருவராய் வாழ்ந்தார்.

அதுகுறித்து நாளை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x