Last Updated : 14 Jan, 2014 10:07 AM

 

Published : 14 Jan 2014 10:07 AM
Last Updated : 14 Jan 2014 10:07 AM

பிப்.7-ல் தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்

தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் காலியாகும் 55 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன்

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் ஏப்ரல் 2-ம் தேதியுடன் காலியாகின்றன. அதன்படி திமுகவைச் சேர்ந்த எஸ்.அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, அதிமுகவைச் சேர்ந்த என்.பாலகங்கா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், காங்கிரஸை சேர்ந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.

இதே தேதியில் மகாராஷ்டி ராவின் ஏழு இடங்கள், ஒடிசாவில் நான்கு, மேற்கு வங்கத்தில் ஐந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களும் காலியாகின்றன. மகாராஷ்டிர பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான பிரகாஷ் கே. ஜவடேகர், காங்கிரஸின் மூத்தத் தலைவரும் முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சருமான முரளி எம். தியோராவின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

ஆந்திரத்தின் 6, பிஹாரில் ஐந்து, குஜராத்தில் நான்கு, சத்தீஸ்கர், ஹரியாணா, ஜார்க்கண்டில் தலா இரண்டு, அசாம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் தலா மூன்று, இமாசலப் பிரதேசம், மேகாலயம், மணிப்பூரில் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் ஏப்ரல் 9-ம் தேதியுடன் காலியாகின்றன. பிஹாரில் ஐக்கிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சிவானந்த் திவாரி, பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.பி.தாகுர் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

மொத்தம் 55 இடங்கள்

இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 மாநிலங்களில் காலியாகும் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நாளில் மாலை ஐந்து மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்றும் பிப்ரவரி 10 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்

தேர்தலில் போட்டியிடுவதற் கான மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 28. அடுத்த நாளான 29-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் வாங்க 31-ம் தேதி கடைசி நாளாகும். இந்த தேர்தலுக்கான முறை யான அறிவிக்கை ஜனவரி 21ம் தேதி வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x