Published : 15 Aug 2016 10:56 AM
Last Updated : 15 Aug 2016 10:56 AM

இன்று அஞ்சல் பின்கோடு அறிமுகப்படுத்தப்பட்ட தினம்: தபால்களை சரியான முகவரியில் சேர்க்கும் தொழில்நுட்பம்

இன்று 70-வது சுதந்திர திரு நாளைக் கொண்டாடும் இதே நாளில் 1972-ம் ஆண்டு பின் கோடு எனப்படும் இந்திய அஞ்சல் துறையின் குறியீட்டு எண் அறி முகப்படுத்தப்பட்டது. பின்கோடு (PINCODE) முறையை அறிமுகப் படுத்துவதற்கு முன் ஒரு நகரத்தின் தபால் பட்டுவாடா பகுதிகளை அந்த தபால் நிலையத்துக்கான பகுதி எண்ணாக குறிப்பிட்டு வந்த னர். அன்றைய மதராஸ் (GPO) பகுதிக்கு மதராஸ் 1 என்றும், அண்ணா சாலை பகுதிக்கு மதராஸ் 2 என்றும், பார்க் டவுன் பகுதிக்கு மதராஸ் 3 என்றும், மயிலாப்பூர் பகுதிக்கு மதராஸ் 4 என்றும், திருவல்லிக்கேணி பகுதிக்கு மதராஸ் 5 என்றும் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளுக்கு இதுபோல் எண்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இந்த முறையே பின்பற்றப்பட்டு வந்தது.

ஆரம்ப காலங்களில் தபால் சென்றடையும் கிராமத்துக்கு வழி (VIA) என்று குறிப்பிட்டு வந்தனர். உதாரணத்துக்கு, பாலக்காட்டுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் வழி கோயம்புத்தூர், தேனிக்கு அனுப்பப் படும் கடிதங்கள் வழி திண்டுக்கல் என்று பல்வேறு விதமாக கடிதப் போக்குவரத்து வழிகளை குறிப் பிட்டு வந்தனர். இந்த நடை முறை ஒருவகையில் பெரிய நகரங்களுக்கு மட்டுமே பொருந்தி யதால் ஒரே பெயர்களைக் கொண்ட கிராமங்களுக்குத் தபால்களை அனுப்புவதில் சிரமமாக இருந் தது. இதனால், தபால்கள் பொது மக்களுக்கு தாமதமாக சென்றடை யத் தொடங்கின. இதையடுத்து கடிதப் போக்குவரத்தை துரிதப் படுத்தவும், தபால்களைச் சரியான முகவரியில் சேர்க்கவும், இந்திய தபால்துறை 1972 ஆக. 15-ம் தேதி அஞ்சல் குறியீட்டு எண் (PINCODE) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து தேசிய விருதுபெற்ற முன்னாள் அஞ்சல் ஊழியர் நா.ஹரிஹரன் கூறியது:

இந்தியா 8 பகுதிகளாக பிரிக் கப்பட்டு தபால் பட்டுவாடா அலுவலகங்களுக்கு தனித்தனி எண்கள் ஒதுக்கப்பட்டன. 8 பகுதி களின் முதல் எண், குறிப்பிட்ட அந்த மாநிலத்தை குறிப்பிடும். தமிழ்நாடு, கேரளம், லட்சத்தீவுகள் ஒரு பகுதியாக பிரிக்கப்பட்டு, அதற்கு முதல் எண் 6 என ஒதுக்கப்பட்டது. பின்கோடு எண்ணின் இரண்டாவது மற்றும் மூன்றாவது எண் அஞ்சல் பிரிப்பகத்தின் துணை மண்டலத் தையும், மாவட்டத்தையும் குறிப் பதாக அமைக்கப்பட்டது. கடைசி 3 எண்கள் தபால் பட்டுவாடா நிலையத்தை குறிப்பிடும்படி குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டன.

ராணுவத்துக்கான தபால் சேவைக்கு 9 ஆரம்ப எண் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பின்கோடு எண்களைக் கொண்ட தபால் நிலையமாக புதுடெல்லி தலைமை தபால் நிலையம் செயல்படத் தொடங்கி யது. அதன் எண் 110001. எந்த ஒரு நபர், நிறுவனத்துக்கு முகவரி எப்படி முக்கியமாக இருக்கிறதோ, அதுபோல் அந்த முகவரியில் குறிப்பிடப்படும் அவர்கள் ஊரின் பின்கோடும் இருந்தால் மட்டுமே அவருக்கான தபால் சேவை செய்ய முடியும் என்றார்.

பின்கோடு எண் முக்கியத்துவம்

நா.ஹரிஹரன் மேலும் கூறும்போது, “இந்தியாவில் ஒரே பெயரைக் கொண்ட பல ஊர்கள் உள்ளன. தமிழகத்தில் மேட்டூர், ஆத்தூர் என்ற பெயரில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட ஊர்கள் அமைந்துள்ளன. அதுபோல் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் ஒரே பெயரைக் கொண்ட 100-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. ஒரே பெயர் கொண்ட இந்த ஊர்களில் வசிப்பவர்களுக்கு அந்த ஊர்களின் பின்கோடு குறியீடு எண் மூலம் தபால்துறை, தபால்களை உரியவரிடம் கொண்டு சேர்க்கிறது. இதனால், இன்றுவரை இந்தியா 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்களுடன், 100 கோடி மக்களின் தபால் சேவையை சிறப்பாகக் கையாண்டு வருகின்றன.

உலகின் மிகப் பெரிய துறை நமது இந்திய தபால் துறை. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமாக மொழிகளைக் கொண்ட நாடு இந்தியாதான். எந்த ஒரு மொழியிலும் கடிதங்களில் முகவரியைக் குறிப்பிட்டாலும் பின்கோடு எண்ணை குறிப்பிடும்பட்சத்தில் அது அந்த ஊரைச் சரியாகச் சென்றடையும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x