Published : 16 Mar 2017 09:04 AM
Last Updated : 16 Mar 2017 09:04 AM
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கம் போல வருவாயை மிஞ்சிய செலவுப்பட்டியல்தான் வாசிக்கப் படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், மன்னராட்சி யில் ஆண்டு வரவு - செலவு கணக்குகள் செலவை மிஞ்சிய வருவாயை குவிப்பதாகவே இருந்தன. அதற்குக் காரணம் திட்டமிடப்பட்டு நேர்த்தியாக கையாளப்பட்ட நிதி மேலாண்மை.
வரி வருவாய் பிரதானமாக கருதப்பட்டாலும் மக்களைச் சிரமப்படுத்தி வரி வசூலிக்கக் கூடாது என்பதில் மன்னர்கள் கவனமாக இருந்தனர். பூவிலிருந்து வண்டு தேனை எடுப்பதைப் போலத்தான் நல்லாட்சி தந்த மன்னர்கள் தம்மக்களிடம் வரியை வசூலித்தார்கள் என்று சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடுகிறார்.
இப்படி திரட்டப்படும் நிதியில் பெரும்பகுதியை பெருவழிகள் அமைத்தல், வைத்திய சாலைகள் அமைத்தல், பாட சாலைகள், ஆலயங்கள் எழுப்புதல் இவைகளுக்குத் தான் செலவிட்டார்கள். இப்போது போலவே அந்தக் காலத்திலும் பாதுகாப்புத் துறைக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டது.
மன்னராட்சியின் நிதி மேலாண்மை குறித்து சேலம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் கூறியதாவது:
‘‘இப்போது தாக்கல் செய்யப்படும் ஆண்டு வரவு - செலவு திட்ட அறிக்கையானது ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்பு இப்படி இல்லை.
அரசுக்கு வரி கொடுப்பதை மக்கள் அறமாக கருதியதால் மன்னராட்சியில் வருவாய் கொட்டியது. நிலத்தின் வருவாயில் ஆறில் ஒரு பகுதியானது நிலவரியாக விதிக்கப்பட்டது. பஞ்சம் ஏற்படும்போது அதைச் சமாளிப்பதற்காக பஞ்ச வாரியம் ஏற்படுத்தப்பட்டு அதில் நிரந்தர இட்டுவைப்பு வைக்கப்பட்டது. இதைக் கொண்டு பஞ்ச காலங்களில் மக்களுக்கு செலவிடப்பட்டது.
அரசின் நிதியை முறையாக கையாளும் பொறுப்பு ஸ்ரீபண்டாரங் களிடம் (கருவூலங்கள்) ஒப்படைக்கப்பட்டன. இதன் முக்கியப் பொறுப்பாளராக பண்டாரிகள் நியமிக்கப்பட்டார்கள். இவர் களுக்கு ஆலோசனைகள் வழங்கு வதற்காகவும் வரவு - செலவு தணிக்கை செய்வதற்காகவும் கர்ணத்தார் என்று சொல்லப்படும் கணக்கர் குழுக்கள் இருந்தன. இதில்லாமல், கிராம சபைகளிலும் கர்ணத்தார் இருந்தனர். நீர்நிலை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளைக் கவனித்துக் கொள்வதற்கு கிராம சபைகளே நிதியை திரட்டிக் கொண்டன. பெரிய அளவில் நிதி தேவைப்படும்போது மட்டுமே மத்திய அரசின் உதவி நாடப்பட்டது. பண்டாரிகள், கர்ணத்தார் இவர்கள் அனைவரும் நிதியமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
மக்களுக்கான அரசின் சேவை கள் உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாட சாலைகள், ஆலயங்கள், வைத்திய சாலைகள் உள்ளிட்ட முக்கியமான சேவைகளுக்கு ஏராளமான நிலங்களை மானியமாக எழுதிக் கொடுத்தது அரசு. அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு அவைகள் தங்களின் நிதி தேவைகளைப் பூர்த்திசெய்து கொண்டன. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை அமைப்பதற்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட் டன. அவற்றைக் கொண்டு புதிது புதிதாக நீர் ஆதாரங்களை உருவாக்கினார்கள். இப்படி உருவாக்கப் பட்ட நீர் ஆதாரங்கள் கிராமக் கமிட்டிகளிடம் ஒப்படைக்கப்பட் டன. அரசு தூர்வாரிக் கொடுக் கும் என்று எதிர்பார்த்துக் கொண் டிருக்காமல் கிராமக் கமிட்டிகளே இவைகளைத் தூர்வாரி பராமரித்துக் கொண்டன.
ராஜராஜன் உள்ளிட்ட மன்னர் கள் காலத்திலும் குப்தர்கள் காலத்திலும் நாணயங்களைத் தங்கத்தால் வெளியிடும் அளவுக்கு நிதிவருவாய் மேன்மை நிலையில் இருந்தது. அதனால்தான் அதை ‘பொற்காலம்’ என்றார்கள். மொத்தத்தில் அன்றைக்கு, செலவுக்குப் போக கஜானாவில் காசு இருந்தது. இன்றைக்கு, கஜானாவை காலியாக வைத்துக் கொண்டுதான் திட்டமே போடு கிறார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT