Last Updated : 15 Jul, 2016 03:29 PM

 

Published : 15 Jul 2016 03:29 PM
Last Updated : 15 Jul 2016 03:29 PM

ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மூவர், ஸ்பெயின் நாட்டில் நடந்த சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்று புதிய உத்வேகத்துடன் தாயகம் திரும்பியுள்ளனர்.

நாக்பூரை தலைமையிடமாக கொண்ட `ஸ்லம் சாக்கர்’ என்ற நிறுவனம், நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் 15 மாணவர்களை தேர்வு செய்து, 12 வயதுக்கு உட்பட்ட ஒரு அணியை உருவாக்கியது. இதில், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் பா.முருகன்(12), பா.யாழ்திலிபன் (12), பெ.ஸ்னோசன் (12) ஆகியோர் இடம் பிடித்தனர்.

ஸ்பெயின் சென்றனர்

இந்த அணிக்கான முழு ஸ்பான்சர் பொறுப்பையும் காமேசா நிறுவனம் ஏற்றது. இந்த அணி `காமேசா டிரீம் புட்டர்ஸ் அணி’ என அழைக்கப்பட்டது. இவர்களுக்கு சென்னையில் 2 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் ஸ்பெயின் நாட்டின் சான் செபாஸ்டின் நகரில் நடந்த சர்வதேச இளைஞர் கால்பந்து போட்டியில் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட்டனர். இப்போட்டி இம்மாதம் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடை பெற்றது.

இந்திய அணி (காமேசா டிரீம் புட்டர்ஸ்) 4 ஆட்டங்களை ஆடியது. இதில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. போட்டிகளில் தோல்வியைத் தழுவிய போதும் புதிய நம்பிக்கை, உத்வேகத்துடன் தூத்துக்குடி மாணவர்கள் மூவரும் நேற்று தாயகம் திரும்பினர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒரு போட்டியில் வெற்றி

மாணவர் யாழ் திலிபன் கூறும்போது, “இந்த வயதில் வெளிநாடு செல்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. முதல் போட்டியில் ரியல் யூனியன் அணியை எதிர்த்து விளையாடி 14- 1 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவினோம். 2-வது போட்டியிலும் பார்சிலோனாவை சேர்ந்த சான்ட் ஜஸ்ட் அணியிடம் 13- 0 என்ற கோல்கணக்கில் தோற்றோம்.

ஆனால், மூன்றாவது போட்டியில் சுதாரித்து ஆடி ஸ்பெயின் நாட்டின் செயின்ட் பேட்ரிக்கன் அணியை 7- 3 என்ற கோல் கணக்கில் வென்றோம். தொடர்ந்து 4-வது போட்டியில் அமெரிக்காவின் டிசி யுனைடெட் அணியிடம் 3- 2 என்ற கோல் கணக்கில் தோற்றோம்.

போட்டியில் தோல்வியைத் தழுவிய போதிலும் இந்த பயணம் எங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றார் அவர்.

சாதிக்க வேண்டும்

மாணவர் ஸ்னோசன் கூறும்போது, “ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் மற்றும் சான் செபாஸ்டின் நகர மேயர் ஆகியோரை சந்தித்து பேசினோம். ஸ்பெயின் நாட்டில் உள்ள மைதானமே எங்களுக்கு வியப்பை தந்தது. கால்பந்து போட்டியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார் அவர்.

மகிழ்ச்சி அளிக்கிறது

மாணவர் முருகன் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக கால்பந்து விளையாடி வருகிறேன். இந்த போட்டிக்காக 2 மாதங்கள் மட்டுமே பயிற்சி எடுத்தோம். மற்ற அணியினர் 6 ஆண்டுகள் வரை தீவிர பயிற்சி எடுத்து வந்திருந்தனர். ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார் அவர்.

பெற்றோர் நெகிழ்ச்சி

மூன்று மாணவர்களும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். முருகன் திருநெல்வேலி சத்திரம் புதுக்குடியை சேர்ந்தவர். அவரது தந்தை பால்துரை ஆட்டோ ஓட்டுநர்.

தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த ஸ்னோசனின் தந்தை பெரிடின், மீன்பிடி தொழிலாளி. தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த யாழ் திலிபனின் தந்தை பாக்கியராஜ், ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்து வருகிறார். தங்கள் மகன்கள் வெளிநாடு சென்று வந்தது குறித்து பெற்றோர் மிகுந்த நெகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.

முருகனின் தந்தை பால்துரை கூறும்போது, “வெளிநாடு சென்று கால்பந்து போட்டியில் பங்கேற்றதன் மூலம் எங்களை பெருமைப்பட செய்துவிட்டான் முருகன். எங்கள் குடும்பத்தில் யாரும் இதுவரை வெளிநாடு சென்றதில்லை. கால்பந்து விளை யாட்டில் முருகன் சாதிக்க என்னால் முடிந்தவரை உதவி செய்வேன்” என்றார் நெகிழ்ச்சியோடு.

பாராட்டு விழா!

ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுவிட்டு தயாகம் திரும்பிய முருகன், யாழ் திலிபன், ஸ்னோசன் ஆகியோருக்கு புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு கால்பந்து கழக தலைவர் ஜே.சேசையா வில்லவராயர், மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.

மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த மாவட்ட கால்பந்து பயிற்றுநர் நடராஜ முருகன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், தர்மர் ஆகியோரை பள்ளி தாளாளர் அருட்சகோதரர் பெர்டினன்ட், தலைமை ஆசிரியர் பெப்பின் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x