Published : 30 Oct 2014 10:19 AM
Last Updated : 30 Oct 2014 10:19 AM

போலி வாக்காளரை கண்டுபிடிக்க புதிய சாப்ட்வேர்: தனியார் ஐ.டி. நிறுவனத்தின் மூலம் இனி பட்டியல் பராமரிப்பு

வாக்காளர் பட்டியலை நூறு சதவீதம் பிழையின்றி தயாரிக்கவும், போலி வாக்காளர்களை கணினி தொழில்நுட்பத்தில் நீக்கவும் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் நடந்து வருகிறது. இந்த திருத்தப் பணிகள் நவம்பர் 10-ம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், வாக்காளர் திருத்தப் பணிகளில் பல்வேறு பிழைகள் ஏற்படுகின்றன. பெயர், எழுத்து, முகவரி, புகைப்படம், வார்டு என பல வகைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. இதற்காகத் திருத்தப் பணிகளை வாக்காளர்கள் தொடர்ந்து மேற்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் ஒரு பிழை ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் துறை புதிய முடிவெடுத் துள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங் களிலும் வாக்காளர் திருத்தப் பணிகள், வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி, வாக்காளர் விவரங்களை சேகரித்து, மென் தொழில் நுட்பத்தில் பராமரித்தல், போலி வாக்காளர்களை சாப்ட்வேர் மூலம் கண்டறிந்து அவற்றை நீக்குதல் போன்ற பணிகளை தனியார் தொழில் நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைப்பதற் கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி மற்றும் தேர்தல் தொடர்பான பணிகள் சென்னையில் மாநகராட்சி வசமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டிலும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவற்றில் மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடுதல் பணிச் சுமையுடன் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் 100 சதவீதம் பிழையில்லா வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அட்டை தயாரிக்க முடிய வில்லை. கணினி தொழில்நுட்பத் தில் டேட்டா பேஸ் (தகவல் தொகுப்பு) பராமரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.

கடந்த தேர்தல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் தனியார் நிறுவனம் மூலம் தட்டச்சர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டனர்.

தற்போது புதிய திட்டத்தின் படி, பட்டியல் தயாரிப்பு முதல் தேர்தல் நடத்துவது வரையிலான அலுவலக ரீதியான மற்றும் ஆயத்தப் பணிகள் அனைத்தும், தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள உள்ளோம். இதற்காக அனுபவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனித ஆற்றல் கொண்ட நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சாப்ட்வேர்கள் மூலம், அனைத்து மாவட்ட வாக்கா ளர்களின் விவரங்களும் ஒரே டேட்டா பேஸில் கொண்டு வரப்பட்டு, போலி வாக்காளர் அடையாளம் காணப்பட்டு, பட்டியலிலிருந்து நீக்கப்படுவர்.

பொதுவான ஒப்பந்தப்புள்ளி மூலம், இந்திய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டு, தேர்தல் மற்றும் வாக்காளர் தொடர்பான விவரங்களை எந்த விதத்திலும் கசிய விடாத வகையிலான, முதன்மையான, அனுபவம் பெற்ற நிறுவனத்துக்கு டிசம்பர் 1-ம் தேதிக்குள் இந்தப் பணிகள் அளிக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x