Published : 09 Mar 2017 07:24 PM
Last Updated : 09 Mar 2017 07:24 PM

மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 3வது நாளாக தொடர்ந்து போராட்டம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவரின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் வியாழக்கிழமை மூன்றாவது நாளாக நடைபெற்ற பெற்ற போராட்டத்தில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரிட்ஜோவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

கச்சத்தீவு அருகே திங்கட்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்ற போது பெற்றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்து செவ்வாய்கிழமை தங்கச்சிமடத்தில் மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாப் போராட்டம் துவங்கப்பட்டு புதன்கிழமை இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது.

முன்னதாக புதன்கிழமை மாலை கொழும்பில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் தலைமையில் இரு நாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களையும், இந்திய சிறைகளில் உள்ள 15 இலங்கை மீனவர்களையும் பரஸ்பரம் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது நாளாக தங்கச்சிமடத்தில் வியாழக்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவிற்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடாக இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் சுப.உதயக்குமார், தேசிய சுற்றுப்புறச் சூழல் அறக்கட்டளையை சேர்ந்த பாத்திமா பாபு ஆகியோர் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும் போராட்டத்திற்கு மாணவர்களும், இளைஞர்களும், தமிழக கடலோர மாவட்டங்களிலிருந்து மீனவர்களும் கலந்து கொண்டனர்.

மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் நேரில் வலியுறுத்தினாலும் உறவினர்கள் மறுத்து விட்டனர். இதனால் ராமேசுவரம் மருத்துவனையிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x