Published : 17 Oct 2016 10:52 AM
Last Updated : 17 Oct 2016 10:52 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் நடைபெற்று வரும் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் சென்னையில் கடந்த 6-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபர் 17, 18 தேதிகளில் 48 மணி நேரம் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை என பரவலாக பல்வேறு நகரங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ரயில் சேவை பாதிப்பு:
ரயில் மறியல் காரணமாக தெற்கு ரயில்வேயின் திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு சில ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
17.10.2016 அன்று முழுவதும் ரத்து செய்யப்படும் ரயில்கள்:
1) ரயில் எண்: 56033 மயிலாடுதுறை - மன்னார்குடி பயணிகள் ரயில்
2) ரயில் எண்: 56872 திருவாரூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்
3) ரயில் எண்: 56879 மயிலாடுதுறை - திருவாரூர் பயணிகள் ரயில்
4) ரயில் எண்: 56711 காரைக்கால் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில்
பயண நேரம் மாற்றியமைக்கப்பட்ட ரயில்கள் (17.10.2016):
1) ரயில் எண்: 6864 மன்னார்குடி - பகத் கி கோடி எக்ஸ்பிரஸ் மாலை 6 மணிக்கு மன்னார்குடியில் இருந்து புறப்படும்.
2) ரயில் எண்: 11018 காரைக்கால் - லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும்.
3) ரயில் எண்: 76846 திருச்சிராப்பள்ளி - விருதாச்சலம் பயணிகள் ரயில் இரவு 8 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.
4) ரயில் எண்: 56703 திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் பயணிகள் ரயில் திருச்சியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூதன போராட்டங்கள்:
திருச்சி குடமுருட்டி ரயில் நிலையத்தில் திரண்ட விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சேலம் மாவட்டம் மேச்சேரி செல்ல வேண்டிய சரக்கு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தைச் சேர்ந்த 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் | படம்: ஜி.ஞானவேல் முருகன்.
குடமுருட்டி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நாற்று நடும் பெண்கள் | படம்: ஜி.ஞானவேல் முருகன்.
உச்சகட்ட போராட்டம் தொடரும்: நல்லகண்ணு
"தமிழகத்தில் காவிரி நீர் உரிய அளவு கிடைக்காததால் 17 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர்.
இந்நிலையில், தமிழர்கள் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சகட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரித்துள்ளார்.
விரிவான செய்திக்கு: > | காவிரி பிரச்சினையில் உச்சகட்ட போராட்டங்கள் தொடரும்: ரயில் மறியலில் ஈடுபட்ட நல்லகண்ணு எச்சரிக்கை |
விருதுநகரில் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு | படம்: இ.மணிகண்டன்.
மதுரையில் போலீஸ் தடியடி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மதுரையில் மேற்கு வெளி வீதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
இதேபோல் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட மக்கள் நலக் கூட்டணியினர் முயன்றனர். உடனடியாக போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்த நிறுத்த தடுப்பு வேலிகளை அமைத்தனர். அப்போது மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்கள் சிலர் தடுப்பு வேலியைத் தாண்ட முற்பட்டனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
விரிவான செய்திக்கு: > | காவிரி மேலாண்மை வாரியம் கோரி மதுரையில் ரயில் மறியல்: போலீஸ் தடியடி; போக்குவரத்து பாதிப்பு |
வைகோ, துரைமுருகன் கைது:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றபோது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது, காவிரி நீரை தடுக்கின்ற கர்நாடக அரசை, தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மோடி அரசைக் கண்டிக்கிறோம் என வைகோ கோஷம் எழுப்ப தொண்டர்களும் அதையே உரைத்தனர்.
வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட திமுக மூத்த தலைவர் துரைமுருகனை போலீஸார் கைது செய்தனர்.
முந்தைய பதிவுகள்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் ரயில் மறியல் போராட்டம் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கியது.
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது:
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, சேலம், கோவை, திருப்பூர் என பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை பெரம்பூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றபோது போலீஸ் ஸ்டாலின் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் முன் மு.க.ஸ்டாலின் தலைமையில் திரண்ட திமுகவினர் | படம்: ம.பிரபு.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே திரண்ட திமுகவினர் | படம்: ம.பிரபு.
சென்னை பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது திமுகவின் மா.சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஆலந்தூர் திமுக எம்.எல்.ஏவும், அமைப்புச் செயலாளருமான த.மோ.அன்பரசன் சார்பில் தாம்பரம் ரயில் நிலையத்தில் மறியல் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
"தமிழக விவசாயிகளை ஏமாற்றாதீர்"
தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றுவதாக கோஷம் எழுப்பினர். திருப்பூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளும், அனைத்துக் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் | படம்: எம்.ஸ்ரீநாத்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முத்தரசன் வலியுறுத்தல்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
தஞ்சை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் | படம்: ஆர்.எம்.ராஜரத்தினம்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT