Published : 09 Feb 2014 10:53 AM
Last Updated : 09 Feb 2014 10:53 AM

சென்னையில் தேசிய திறந்தவெளி கல்வி நிறுவன மையம்: 10, 12-ம் வகுப்புத் தேர்வை நேரடியாக எழுதலாம்

“நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூல்” என்று அழைக்கப் படும் தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம். பள்ளி சென்று படிக்க முடியாதவர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் இங்கு சேர்ந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம்.

தமிழக அரசு தேர்வுத்துறையில் தனித்தேர்வர்களாக சேர்ந்து இது போன்று தேர்வு எழுதலாம் என்ற போதிலும், என்.ஐ.ஓ.எஸ். திட்டத்தில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தாங்களே தேர்வுசெய்து படிக் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுகள் ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் என ஆண் டுக்கு இருமுறை நடத்தப்படும்.

என்.ஐ.ஓ.எஸ். திட்டத்தில் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு முடித்த பிறகு ரெகுலர் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர முடியும். தற்போது நாடு முழுவதும் 19 மண்டல மையங்கள் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை எந்த மையமும் இல்லாததால் தமிழக மாணவர்கள் கொச்சி மண்டல மையத்தில் சேர்ந்து படித்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் புதிய மண்டல மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைச் சாலை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மண்டல மையத்தை என்.ஐ.ஓ.எஸ். தலைவர் எஸ்.எஸ்.ஜனா சனிக்கிழமை திறந்துவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

புதிய தேர்வுமுறை அறிமுகம்

தேசிய திறந்தவெளி கல்வி நிறு வனத்தில் இந்தியா முழுவதும் 26 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் 5.5 லட்சம் பேர் சேருகிறார்கள். கடந்த ஆண்டு இங்கு 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 4 ஆயிரம்பேர் அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஐ.டி., என்.ஐ.டி. கல்லூரிகளில் சேர்ந்துள்னர்.

15 பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர் என்றார் ஜனா. என்.ஐ.ஓ.எஸ். சென்னை மண்டல மையத்தின் இணைய தளத்தை (www.niosrcchennai.org) சென்னை தொலைக்காட்சி செய்தி இயக்குநர் இ.மாரியப்பன் தொடங்கி வைத்தார். தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தமிழ்நாடு ஒருங் கிணைப்பாளர் முகமது நைமூர் ரகுமான் வாழ்த்திப் பேசினார்.

தமிழ்வழி தேர்வு

முன்னதாக, சென்னை மண்டல இயக்குநர் பி.ரவி வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். விழா முடிந்ததும் என்.ஐ.ஓ.எஸ். தலைவர் எஸ்.எஸ்.ஜனா “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேர் தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படிக்கிறார்கள். இதுவரை பாடத்திட்டங்கள் தமிழ் வழியில் இல்லை. தற்போது பாடத்திட்டம் தமிழ்வழியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணி ஆகஸ்ட் மாதம் முடிவடைந்துவிடும். அதன்பிறகு தமிழக மாணவர்கள் தமிழ்வழியிலும் தேர்வெழுதலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x