Published : 27 Apr 2017 10:55 AM
Last Updated : 27 Apr 2017 10:55 AM
சுட்டெரிக்கும் வெயிலால் பனை ஓலை விசிறிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது பகல் நேர வெப்பநிலை 105 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவை எட்டியிருக்கிறது. மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின்போது வெப்பநிலை மேலும் உயரக்கூடும்.
கைகொடுக்கின்றன
வெயில் காலத்தில் வீடுகளில் புழுக்கத்தால் மக்கள் அவதியுறு கிறார்கள். அப்போதெல்லாம் அவர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் பனை ஓலை விசிறிகள் கை கொடுக்கின்றன. இதனால் இத்தகைய விசிறிகளை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடைகளில் பனை ஓலை விசிறிகள் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகின்றன. விசிறியில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தகந்தாற்போன்று விலையும் அதிகமாகிறது.
ஆனால் ரூ.30-க்கு பனை ஓலை விசிறிகளை சைக்கிளில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார் மனோகரன்(64). தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த இவர், கடந்த 35 ஆண்டுகளாக சைக்கிளில் சென்று பனை ஓலை விசிறிகளை விற்பனை செய்து வருகிறார்.
கைத்தொழில்
தூத்துக்குடியில் இருந்து சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு வந்து விற்பனையில் ஈடுபட்டிருந்த அவர் கூறியதாவது:
பங்குனி, சித்திரை மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும்போது, பனை ஓலை விசிறிகள் விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது பனை ஓலை விசிறிகளை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். கைத்தொழிலாக இந்த விசிறிகளை நேர்த்தியாக எனது மனைவி சாந்தி(54) உருவாக்குகிறார்.
விசிறி தயாரிக்க தேவையான பனை ஓலைகளை சாத்தான்குளம், உடன்குடி போன்ற பனைமரங்கள் அதிகமுள்ள இடங்களில் இருந்து வாங்கி வருகிறேன். சாதாரணமாகவும், வண்ணம் தீட்டுதல் போன்ற வேலைப்பாடுகளுடனும் விசிறிகளை தயாரிக்கிறோம்.
இயற்கையான காற்று
சீஸன் காலமான தற்போது நாளொன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட பனை ஓலை விசிறிகள் விற்பனையாகின்றன. சாதாரண விசிறிகள் ரூ.30-க்கும், வேலைப்பாடுகளுடன் கூடிய விசிறிகள் ரூ.40-க்கும் விற்பனை செய்கிறேன். இயற்கையான காற்று கிடைக்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
மொத்தமாக கடைகளுக்கு ஆர்டர்களின்பேரில் பனை ஓலை விசிறிகளை செய்து தருவதில்லை. காரணம், கைத்தொழிலாக செய்து கொடுக்கும் பனை ஓலை விசிறிகளை கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே சாதாரண மக்களும் வாங்கி பயன்படுத்தும்நோக்கில் குறைந்த விலையில் பனை ஓலை விசிறிகளை விற்பனை செய்து வருகிறேன் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT