Published : 02 Dec 2013 07:30 AM
Last Updated : 02 Dec 2013 07:30 AM

ஏற்காடு பிரச்சாரம் ஓய்கிறது: துணை ராணுவம் குவிப்பு

இடைத்தேர்தலை முன்னிட்டு ஏற்காடு தொகுதியில் துணை ராணுவம் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் ஞாயிற்றுக் கிழமை காவல்துறையின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைவதால், வெளிமாவட்டத்தைச் சேர்த்தவர்கள் ஏற்காடு தொகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என ஆட்சியர் மகரபூஷணம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்காடு இடைத்தேர்தல் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பா ளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 33 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

4-ம் தேதி விடுமுறை

ஏற்காடு இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு வரும் 4-ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு 290 வாக்கு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்ற னர். பாதுகாப்புப் பணியில் துணை ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தொகுதியில் உள்ள 290 வாக்குச்சாவடி மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், மை, எழுதுபொருள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. பொருட்களை கொண்டு செல்ல வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் தேர்தலுக்கு முதல் நாள் மாலை ஐந்து மணிக்கு, சம்பந்தப்பட்ட பூத்களில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்படும்பட்சத்தில், அதற்கு மாற்றாக மின்னணு இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

53 தனிப்படைகள்

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் க.மகரபூஷணம் கூறியதாவது:

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக வந்த புகாரை அடுத்து தொகுதிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் அடங்கிய 160 பேர் கொண்ட 53 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நான்-ஸ்டிக் தவா பறிமுதல்

இந்நிலையில் சென்னையில் இருந்து பேளூர் நோக்கி வந்த லாரியை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது சந்தேகத்துக்குரிய வகையில் லாரியில் இருந்த 1100 நான்-ஸ்டிக் தவா பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு லாரியைக் கைப்பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம். காவல் துறையினரின் பெயர் பலகை கொண்ட சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆட்சியர் எச்சரிக்கை

மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைவதால், அதன்பிறகு யாரும் எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபடக்கூடாது. வெளி மாவட்டத்தில் இருந்து பிரச்சாரத்துக்காக வந்துள்ளவர்கள் மாலைக்குள் வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கெடுபிடியால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

இடைத்தேர்தலை முன்னிட்டு, தீவிர வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏற்காடு மலைப்பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஏற்காடு தொகுதிக்குள் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. முறையான ஆவணங்கள் இல்லாததால் இதுவரை ரூ. 5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x