Published : 03 Feb 2014 12:49 PM
Last Updated : 03 Feb 2014 12:49 PM
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்காக இயக்கப்படும் 36,389 வாகனங்களில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முழுமையாக ஆய்வு நடத்தப்படவுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ள வாகனங்களுக்கு தகுதிச் சான்று (எப்.சி) அளிக்கப்படமாட்டாது என போக்குவரத்துத் துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 81 லட்சத்து 91 ஆயிரத்து 474 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன பெருக்கத்தைப்போல், விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இயக்கப்படும் 36,389 வாகனங்களில் முழுமையாக ஆய்வு நடத்தப்படவுள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சோதனை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி, கல்லூரி வாகனங்கள் சாலை விபத்துகளில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இயக்கப்படும் வாகனங்களில் முழுமையாக ஆய்வு நடத்தப்படவுள்ளது. வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்புக் கருவிகள், முதலுதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.
இந்த ஆய்வுப் பணியில் மொத்தம் 350-க்கும் மேற்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஈடுபடுவார்கள். எந்த வாகனத்திலாவது குறைபாடு இருந்தால், தகுதிச் சான்று (எப்.சி) அளிக்கப்படமாட்டாது. எப்.சி இல்லாமல் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT