Published : 12 Dec 2013 06:23 PM
Last Updated : 12 Dec 2013 06:23 PM
தமிழக மீனவர்கள் பிரச்சினையை உடனடியாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் எடுத்துச் செல்ல, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கை அரசின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் 209 பேரை மீட்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை) எழுதிய கடிதம்:
"இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கடத்தில் செல்லப்படுவது, சிறைபிடிக்கப்படுவது போன்ற சம்பவங்களில் இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவது, அந்நாட்டு அரசுக்கு தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தைரியத்தை கொடுத்திருக்கிறது.
கடந்த 11-ம் தேதி அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 325 மீனவர்கள் அக்கரைப்பேட்டை அருகே கடலில் 47 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கடத்திச்செல்ல முயன்றனர்.
நடுக்கடலில் மிகப்பெரிய மோதல் நடந்திருப்பதால் கடத்தல் முயற்சி நடவடிக்கை மீனவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துள்ளது. அந்த நேரத்தில் ஆயுதங்கள் தாங்கிய இலங்கை கடற்படையினருடன் நேரடியாக மோதாமல் மீனவர்கள் நிதானமாக செயல்பட்டதால் பல அப்பாவி மீனவர்கள் உயிர்தப்பியிருக்கிறார்கள்.
15 படகுகளில் இருந்த 110 மீனவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் சரண் அடைந்த நிலையில், 32 படகுகளில் இருந்த 215 மீனவர்கள் மட்டும் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் விரோத போக்குடனும் தாக்கும் எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். சரண் அடைந்த மீனவர்கள் 110 பேரும் மேல்விசாரணைக்காக திரிகோணமலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல்களை கடலோர பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை வட்டாரங்களிடம் இருந்து தமிழக அரசு பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், மற்றொரு சம்பவத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே கடலில் 8 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 30 மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் பிடித்துச்ச்செல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது.
அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டிருக்கும் இந்த இரு சம்பவங்கள் இலங்கை கடற்படையின் மிகவும் மூர்க்கத்தனமான செயல்கள் ஆகும்.
இலங்கை அரசின் மறைமுகமான ஒப்புதல் இல்லாமல் இந்தச் சம்பவங்கள் நடந்திருக்கவே முடியாது. இதன் மூலம் இந்தியாவின் மதிப்புக்கும் மரியாதைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மீனவ சமுதாயமே மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது.
இத்தகைய சூழலில் மத்திய அரசு இப்போதாவது விழித்துக்கொண்டு உண்மை நிலையை அறிந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அதிகபட்ச நிலையில் தூதரக அளவில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
இலங்கையில் டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி, வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைத்து கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இனியும் தாமதம் செய்யாமல் தாங்கள் (பிரதமர்) இலங்கை அதிபருடன் தனிப்பட்ட முறையில் இந்த பிரச்சினையை எடுத்துச்செல்ல வேண்டும்.
இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் அது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் உள்ள மீனவ மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை பிடித்துச்சென்ற 140 மீனவர்களையும் அவர்களின் 23 படகுகளையும் எவ்வித தடுப்புக்காவலும் இன்றி உடனடியாக விடுவிக்க மத்திய அரசாங்கம் விரைவாகவும், உறுதியாகவும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏற்கனவே இலங்கை சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் 69 மீனவர்களையும், அவர்களின் 47 படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்குமாறு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT