Published : 17 Oct 2014 10:50 AM
Last Updated : 17 Oct 2014 10:50 AM
சந்தன கடத்தல் வீரப்பனின் சகாப்தத்தை தமிழக அதிரடிப்படை முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், வீரப்பன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பழைய கூட்டாளிகள் சிலர் கர்நாடக போலீ ஸாரின் தேடுதலுக்கு அஞ்சி, மேற்கு தொடர்ச்சி மலையில் முகாமிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவரும் தகவல் அம்பல மாகியுள்ளது. இவர்களை பிடிக்க தமிழக, கர்நாடக அதிரடிப் படை யினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மூன்று மாநிலங் களில் 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப் பளவில் மேற்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்துள்ளது. தமிழக, கர்நாடக போலீஸாருக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கிவந்த சந்தன கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ்குமார், நாகப்பா மற்றும் வன அதிகாரிகளை கடத்தி இரு மாநில அரசுகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்த காலம் உண்டு.
சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தருமபுரியில் தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தன கடத்தல் வீரப்பன் சகாப்தம் முடிந்துவிட்ட நிலையிலும், மேற்கு தொடர்ச்சி மலையில் அதிரடிப்படை வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை. மீண்டும் காட்டுக்குள் நக்ஸலைட்டுகள், வீரப்பனின் பழைய கூட்டாளிகள் தலைதூக்கிவிடக் கூடாது என்பதில் அதிரடிப் படையினர் தீவிர கவனம் செலுத்தி, தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், யானை தந்தம் கடத்தல், சந்தனக் கட்டை கடத்தல் மற்றும் வன விலங்குகளை கொன்ற வழக்கில் குட்டி வீரப்பன் என்கிற சரவணன் என்பவரை மேட்டூர் வனத்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்த னர். பின்னர், கர்நாடக போலீஸார் குட்டி வீரப்பனை, அந்த மாநில வழக்குகளுக்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் குட்டி வீரப்பன் ஆகியோருடனான வனக்குற்றங்களில் கத்திரிப் பட்டியை சேர்ந்த மோட்டா என்கிற சின்னப்பி (55), மாட்டாலியை சேர்ந்த ராவணன் (60), பாலாறு சின்னப்பி உள்ளிட்டவர்கள் கர்நாடக அரசால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் பல்வேறு வனங்குற்றங்களில் ஈடுபட்டதாக கர்நாடக போலீஸாரால் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் ராவணன், மோட்டா, பாலாறு சின்னப்பி ஆகியோர் தமிழக, கர்நாடக போலீஸார் பிடியில் சிக்காமல் மேற்குதொடர்ச்சி மலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
சந்தன கடத்தல் வீரப்பனின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வந்த மேற்கு தொடர்ச்சி மலையில், அவனது பழைய கூட்டாளிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்களைப் பிடிக்க தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர் காட்டுக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ராவணன் மீது கர்நாடக போலீஸில் பல்வேறு வனக்குற்ற வழக்குகள் உள்ளன.
அதேபோன்று, மோட்டா மீது தமிழகத்தில் ஒரு வழக்கும், கர்நாடக மாநிலத்திலும் வழக்குகள் உள்ளன. பாலாறு சின்னப்பி மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கர்நாடக ஏசிஎஃப் வாசுதேவ் மூர்த்தி தலைமையிலான அதிரடிப் படையினர் மாதேஸ்வரன் மலையில் முகாமிட்டு தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அதிரடிப் படையினர் மேற்கு தொடர்ச்சி மலையில் வீரப்பனின் பழைய குற்றவாளிகள் நடமாட்டம் உள்ளதா என 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள னர். சந்தன கடத்தல் வீரப்பனை தமிழக அதிரடிப்படை சுட்டுக் கொன்று பத்தாண்டுகள் முடியும் நிலையில், மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலையில் வீரப்பனின் பழைய கூட்டாளிகள் நடமாட்டம் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
முன்னாள் டிஜிபி விஜயகுமார் வருகை
மேற்கு தொடர்ச்சி மலையில் நக்ஸல்கள், வீரப்பன் மற்றும் குட்டி வீரப்பனின் கூட்டாளிகள் நடமாட்டம் உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை அடுத்து, முன்னாள் டிஜிபியான விஜயகுமார் தமிழக, கேரள எல்லையில் உள்ள அதிரடிப்படை முகாமுக்கு நேற்று முன் தினம் திடீர் விஜயம் மேற்கொண்டார். வீரப்பன் இறந்து பத்தாண்டு நிறைவு அடைவதையொட்டி, அதிரடிப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், அவர்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டி வருகை புரிந்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் காட்டுக்குள் பதுங்கி, வன உயிரினங்களை வேட்டையாடுவதாகவும், பழைய குற்றவாளிகள் காட்டுக்குள் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களைப் பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கர்நாடக அதிரடிப்படை கூறிவருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், முன்னாள் டிஜிபி விஜயகுமார் கூடலூர், உதகை பகுதிகளுக்கு வந்து அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களை சந்தித்து சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT